வெள்ளத்தில் மிதக்கும் வடமாநிலங்கள்… அடித்துச்செல்லப்பட்ட வாகனங்கள்.. புதிய எச்சரிக்கையால் பீதியில் பொதுமக்கள்…!!!
Author: Babu Lakshmanan22 July 2023, 8:25 pm
மகராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில தினங்களாகவே கனமழை கொட்டி வருகிறது. மும்பை, தானே, ராய்காட், பால்கர், ரத்தினகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்யும் கனமழையால், முக்கிய பகுதிகளில் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மும்பையின் தாழ்வான பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி நகர் பகுதியிலும் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இந்திய வானிலை மையம் பால்கர் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மும்பை, தானே, ராய்காட் மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெலுங்கானா, ஆந்திர பிரதேசத்திற்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
இதேபோல, குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையினால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.