மகனுக்கு செயல் தலைவர் பதவியா?…: மதிமுகவில் வெடித்த சர்ச்சை..!!

Author: Rajesh
7 March 2022, 5:54 pm

56 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் ஈடுபட்டுவரும் வைகோ 1980 மற்றும் 90களில் திமுகவின் போர்வாளாக திகழ்ந்தவர்.

வைகோவின் அரசியல் ஆதாயத்துக்காக விடுதலைப்புலிகள் மூலம் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று வெளியான அதிர்ச்சி தகவலைத் தொடர்ந்து 1993-ம் ஆண்டு இறுதியில் திமுகவில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

ஆனால் வாரிசு அரசியலை முன்னெடுக்கும் கருணாநிதி தன்னை கட்சியிலிருந்து நீக்கி விட்டார் என்று அப்போது வைகோ பரபரப்பு குற்றம்சாட்டினார். இதைத்தொடர்ந்து1994-ல் மதிமுகவை தொடங்கினார்.

ஆரம்பத்தில் அவருடைய கட்சிக்கு கிடைத்த நல்ல வரவேற்பு கூட்டணிக்காக அடிக்கடி அதிமுக, திமுக என்று தாவியதால் தேய்ந்து போனது.

கடந்த 5 ஆண்டுகளாகத்தான் அவர் திமுக கூட்டணியில் தொடர்ந்து நீடித்து வருகிறார். டெல்லி மேல்-சபை எம்பியாக உள்ள அவர், கடந்த சில வருடங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டும் இருக்கிறார். இதனால் முன்பு போல அவரை இப்போது அரசியல் மேடைகளில் அதிகம் காண முடிவதில்லை. அறிக்கைகள் விடுவதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறார். உடல் நலம் கருதி வீட்டில் யோகா, எளிய நடை பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

கட்சி மேடைகளில் வைகோவின் கணீர் குரல் ஒலிக்காமல் போனதால் மதிமுக நிர்வாகிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் அவரது மகன் துரை வையாபுரிக்கு மதிமுகவில் முக்கிய பதவி வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மாவட்டச் செயலாளர்கள் மூலம் எழுப்பப்பட்டது. ஆனால் வைகோவுக்கு அதில் மிகவும் தயக்கம்.

திமுகவில் வாரிசு அரசியல் கூடாது என்று கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தற்காக வெளியேற்றப்பட்ட, தான் மகனுக்கு கட்சியில் பொறுப்பு அளித்தால் அது தனது கொள்கையிலிருந்து விலகிச் சென்று விடுவது போலாகிவிடும் என்று அஞ்சி அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தார்.

எனினும் மாவட்ட செயலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில்
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்சியின் மதிமுக
பொதுக்குழு கூட்டத்தில் ஜனநாயக முறைப்படி ஓட்டெடுப்பு மூலம் துரை வையாபுரி தலைமைக் கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால் மதிமுகவிலும் வாரிசு அரசியலா? என்ற விமர்சனம் பரவலாக எழ ஆரம்பித்தது. துரை வையாபுரி தலைமைக் கழக செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுகவில் இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன் என்பவர் கட்சியில் இருந்து விலகினார். மேலும் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்னும் அமைப்பை தொடங்கப் போவதாகவும் அறிவித்து பரபரப்பையும் ஏற்படுத்தினார்.

இந்த நிகழ்வுகள் நடந்து முடிந்து 5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில்தான் தற்போது மதிமுகவில் துரை வையாபுரிக்கு பதவி உயர்வு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், வருகிற 9ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இதில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வென்ற பிரதிநிதிகள் கட்சி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டு பாராட்டும் தெரிவிக்கப்படுகிறது.

அப்போது துரை வையாபுரியை கட்சியின் செயல் தலைவராகவோ, துணைப் பொதுச் செயலாளராகவோ தேர்வு செய்வது பற்றி விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த கூட்டத்தில்தான், விரைவில் பொதுக்குழுவை கூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்கிறார்கள்.

அதன்பின்னர் பொதுக்குழு கூட்டத்தில், செயல் தலைவர் அல்லது துணை பொதுச்செயலாளர் பதவியை துரை வையாபுரிக்கு வழங்கிடும் வகையில் கட்சியின் சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மதிமுகவின் அதிருப்தி மாவட்ட செயலாளர்கள் மத்தியில், பெரும் புகைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து மதிமுக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “தனது மகன் அரசியலுக்கு வருவது பற்றி முன்பு வைகோ சொல்லும் போது இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் விருப்பம் எதுவோ அதுவே ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும். கடந்த 56 வருடங்களாக அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறேன். என் மகன் அரசியலுக்கு வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. அரசியல் என்னோடு போகட்டும். ஆனாலும், அவர் அரசியலுக்கு வருவது குறித்து கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்’ என்று சொன்னார்.

அதன்பிறகுதான் மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தலைமைக் கழக செயலாளராக ரகசிய ஓட்டெடுப்பு மூலம் துரை வையாபுரி தேர்வு செய்யப்பட்டார். அதையே வைகோவிற்காகத்தான் நாங்கள் ஏற்றுக்கொண்டோம். இப்போது இன்னொரு முக்கிய பதவியை அவருக்கு கொடுக்க துடிக்கிறார்கள்.

கடந்த சில மாதங்களாக கட்சி பணி செய்யும் துரை வையாபுரி மட்டும்தான் அந்தப் பதவிக்குத் தகுதியானவரா? இத்தனை ஆண்டுகளாக கட்சிக்கு பணி செய்து, எவ்வளவோ உழைத்த தகுதியான ஒரு நிர்வாகி கூடவா இல்லாமல் போனார்? இதற்காக கட்சியின் விதிமுறைகளையும் திருத்தப் போவதாக சொல்கிறார்கள். இது சரியான போக்கு அல்ல. கட்சிக்கு மேலும் பின்னடைவைத்தான் இது ஏற்படுத்தும். ஏனென்றால் மாவட்ட செயலாளர்களில் 75 சதவீதம் பேருக்கு இதில் உடன்பாடு கிடையாது.
கட்சி இரண்டாக பிளவுபடும் வாய்ப்பும் உள்ளது “என்று மனம் குமுறுகின்றனர்.

துரை வையாபுரியின் ஆதரவாளர்களோ, “2021 தேர்தலுக்கு முன்பிருந்தே அவர் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு அக்டோபரில் நடந்த
9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலிலும், அண்மையில் நடந்து முடிந்த
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும், வைகோ பிரசாரம் செய்யவில்லை. அவருக்கு பதிலாக, துரை வையாபுரிதான் பிரசாரம் செய்தார். அதனால்தான் மதிமுகவினர் கணிசமாக வெற்றியும் பெற்றுள்ளனர்.

வாரிசு அரசியல் என்பது இன்று எல்லா கட்சிகளிலும் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அதை பெரிது படுத்தக்கூடாது. எனவே மதிமுகவில் அவருக்கு செயல் தலைவர் பதவியோ, துணைப் பொதுச் செயலாளர் பதவியோ வழங்குவதில் எந்த தவறும் கிடையாது. தலைமை கழக செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே துரை வையாபுரிக்கு செயல் தலைவர் பதவியை கொடுக்க கட்சியில் தேர்தல்
நடத்தி இருக்கலாம். இப்போது அவருக்கு முக்கிய பதவி தந்தாலும் மகிழ்ச்சிதான்” என்கின்றனர்.

மதிமுகவில் எழுந்துள்ள பிரச்சினை வைகோவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் போல்தான் தோன்றுகிறது!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1516

    0

    0