திமுக கூட்டணியில் முதல் விக்கெட் அவுட்… வெளியேறிய முதல் கட்சி ; இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு..!!

Author: Babu Lakshmanan
6 March 2024, 1:02 pm

திமுக கூட்டணியில் இருந்து வந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, அங்கிருந்து விலகி, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் கட்சி திமுக கூட்டணி கட்சிகளை தக்க வைக்கவும், அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி கட்சிகளை தங்கள் பக்கம் இழுக்கவும் பல்வேறு முயற்சிகளையும், பேச்சுவார்த்தைகளையும் நடத்தி வருகின்றன.

திமுகவை பொறுத்தவரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அவை எந்த தொகுதிகள் என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

அதேவேளையில், காங்கிரஸ் கட்சி கடந்த முறை போட்டியிட்ட 9 தொகுதிகளுடன் சேர்த்து மேலும் 2 தொகுதிகளை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதேபோல, விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை ஒரு பொதுத்தொகுதி உள்பட 3 தொகுதிகளை கேட்டு விடாப்பிடியாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், பானை சின்னத்தில் தான் விசிக போட்டியிடும் என்று கண்டிப்பான கோரிக்கையையும் திமுக தலைமையிடம் முன்வைத்துள்ளது. இதனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல், கமலின் மக்கள் நீதி மய்யம் வருகையால், திமுகவுக்கு தொகுதிகளை பிரித்துக் கொடுப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. கோவை, தென்சென்னை என இரண்டு தொகுதிகளை கேட்பதால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர். இதனால், தேர்தல் நெருங்க நெருங்க கூட்டணி மாறுவதற்கான வாய்ப்பும் இருந்து வருகிறது.

இனிடையே, திமுக கூட்டணியில் இருந்து எந்தநேரமும் கூட்டணி கட்சிகள் வெளியே வரலாம் என்றும், ஒருபடி மேலாக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளுக்கு நேரடியாகவே அதிமுக மூத்த நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திமுகவில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை மட்டுமே நடந்து கொண்டிருப்பதாகவும், கூட்டணி கட்சிகள் வெளியே வரும் என்று அடித்துக் கூறி வந்தார்.

அ.தி.மு.க.வை பொறுத்தமட்டில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஏற்கனவே அந்த அணியில் எஸ்.டி.பி.ஐ. மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் உள்ள நிலையில், டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சியும் அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ளது.

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இருந்து வந்த அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி, அங்கிருந்து விலகி, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.

சென்னை கிரீன்வேஸ்சாலையில் உள்ள இல்லத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பார்வர்ட் பிளாக் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கதிரவன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து இரு கட்சிகளும் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் அ.தி.மு.க. கூட்டணியில் தங்களுக்கு தேனி, ராமநாதபுரத்தில் ஏதேனும் ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

இதன்மூலம், அதிமுக கூறியபடி, திமுக கூட்டணியில் இருந்து முதல் கட்சி வெளியேறி விட்டது. அடுத்தது, காங்கிரஸ் அல்லது விடுதலை சிறுத்தைகள் வெளியேறி, அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகும் என்றும் அதிமுக ஆதரவாளர்கள் தரப்பில் வியூகமாக சொல்லப்படுகிறது.

  • Kanguva movie OTT date announcement 100 கோடி கொடுத்த ஓடிடி..! தியேட்டருக்கு டாடா காட்டிய “கங்குவா”
  • Views: - 213

    0

    0