உதயநிதி பட விவகாரம் விஸ்வரூபம்… இயக்குநர் பா.ரஞ்சித் மீது பாய்ந்த சுப.வீரபாண்டியன்….!!
Author: Babu Lakshmanan4 July 2023, 9:08 pm
2021 தமிழக தேர்தலுக்கு முன்பு திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித்தை கொண்டாடி வந்த திமுகவினர் கடந்த சில மாதங்களாகவே அவரை கடுமையாக விமர்சிக்க தொடங்கி விட்டதை காண முடிகிறது.
அதுவும் அண்மையில் அமைச்சர் உதயநிதியின் நடிப்பில் வெளியான மா மன்னன் படம் குறித்து பா ரஞ்சித் தெரிவித்த கருத்து சமூக நீதிக்காக போராடிவரும் திமுகவை மறைமுகமாக கேலியும் கிண்டலும் செய்வதுபோல இருக்கிறது என்ற விமர்சனம் பொதுவெளியில் எழுந்துள்ளதால் அவருக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அதைவிட திமுக அனுதாபிகளின் வேகம் பல மடங்காக உள்ளது.
படத்தை பாராட்டுவது போல கூறி திமுகவுக்கு பலத்த குட்டு வைத்திருக்கிறார் என்று சமூக ஊடகங்களில் மாமன்னன் பற்றிய விமர்சனங்கள் வெளியான பின்பு பா. ரஞ்சித் மீதான இந்த பாய்ச்சல் இன்னும் அதிகமாகிவிட்டது.
அந்த படத்தை பற்றி அவர்
அப்படி என்னதான் சொன்னார்?…
“மா மன்னன்’ திரைப்படம், பட்டியலின மக்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக நீதியை கொள்கையாக கொண்டுள்ள அரசியல் கட்சியாக இருந்தாலும், கட்சியில் உள்ள மற்ற உயர் வகுப்பினர் சாதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வுகளை அவர்களுக்கு எப்படி நிகழ்த்துகிறார்கள் என்பதை அப்பட்டமாக காட்சிப்படுத்தி இருக்கிறது. உண்மையாகவே தனித்தொகுதி எம்எல்ஏக்களுக்கு அதிகாரம் என்னவாக இருக்கிறது? ஏன் பட்டியலின மக்களின் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க பயப்படுகிறார்கள்?…
சமூகநீதி பேசுகிற கட்சிகளில் இருந்தும் ஊமைகளாக இருப்பதற்கான காரணம் என்ன? அவர்களுக்கான அங்கீகாரமும், அதிகாரமும், பிரதிநிதித்துவமும் சரியாக தரப்படுகிறதா? என்பதற்கான சான்று ‘மாமன்னன்’. உண்மையாகவே பெரும் பாராட்டுக்குரியவர் நடிகர், தயாரிப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை அவரும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம். பொட்டி பகடை, வீராயி, ஒன்டிவீரன் என அருந்ததிய மக்களின் வாழ்க்கையின் ஊடாக மாமன்னனை உருவாக்கி பெரும் வெற்றியை பெற்ற மாரி செல்வராஜ், வடிவேலு மற்றும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”
என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
பா.ரஞ்சித்தின் இந்த விமர்சனத்தில் 90 சதவீதம் பாராட்டு இருந்தாலும் எஞ்சிய 10 சதவீதம் எதிர்மறையாக அமைந்துவிட்டது. அதாவது,
திமுகவில் இன்றுவரை பெரும் சவாலாக இருக்கும் சாதி பாகுபாட்டை உதயநிதியும் அறிந்தே இருப்பார், அதை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக அவர் ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம்”என பா. ரஞ்சித் குறிப்பிட்டு இருந்ததுதான் திமுகவினரை ரொம்பவே டென்ஷன் ஆக்கி விட்டது.
என்றபோதிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், உதயநிதியின் படத்துக்கு பாராட்டு தெரிவித்ததால் அதை அவ்வளவாக அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதைப்பற்றி பேசினால் சமூக நீதி பற்றிய விவகாரம் கட்சிக்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தலாம் என்று கருதியோ என்னவோ அதை அப்படியே விட்டுவிட்டனர்.
எனினும் இந்த விமர்சனத்தை படித்ததும் படத்தில் கதாநாயகனாக நடித்த அமைச்சர் உதயநிதி உடனே தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அது பா ரஞ்சித் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிப்பது போல அமைந்திருந்தது.
“‘மா மன்னன்’ திரைப்படத்தைப் பாராட்டிய இயக்குநர் சகோதரர் பா.ரஞ்சித்துக்கு நன்றி. சாதிய அடக்குமுறைகளும் – ஏற்றத்தாழ்வும் திமுகவில் மட்டுமல்ல, எந்தக் கட்சிக்குள் இருந்தாலும், அது அறவே ஒழிக்கப்பட வேண்டும். அனைவருக்குமான சுயமரியாதையை உறுதி செய்ய, தொடர் பரப்புரை செய்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது, திமுக.
ஆட்சி பொறுப்பேற்கும் போதெல்லாம் சட்டங்களாகவும் திட்டங்களாகவும்`சமூக நீதி’யை அரியணை ஏற்றி, அரசியல் தளத்தில் தொடர்ந்து போராடி வருகிறது திமுக அரசு. அண்ணா – கருணாநிதி வழியில் எங்கள் கட்சித் தலைவரும் இப்பணியைத் தொடர்கிறார். ‘பராசக்தி’யில் தொடங்கி ‘மாமன்னன்’ வரை கலை வடிவங்களிலும் ‘சமூக நீதி’யைத் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வருகிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டு கால சனாதனத்துக்கு எதிராக, சமத்துவம் காண போராடும் நூறாண்டு கால போராட்டம் இது. இன்னும் முழுமை பெறாத போராட்டமும் கூட. ஒரே திரைப்படத்தின் மூலம் சமூகத்தில் தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திவிட முடியாது என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். பெரியார் – அம்பேத்கர் வழியில் மக்களுடன் தொடர்ந்து உரையாடி இம்மாற்றத்தை நிகழ்த்த முடியும். அதைநோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்போம். இப்பயணத்தில் திமுக மீதும் என் மீதும் இப்போது நம்பிக்கை கொண்டிருக்கும் சகோதரர் ரஞ்சித்துக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
உதயநிதியின் பதிலில் திமுகவின் சமூகநீதி போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்ற கருத்து இடம்பெற்று இருப்பதன் மூலம் பா ரஞ்சித் சொன்னதை அவரும் ஏற்றுக்கொண்டுவிட்டது, வெளிப்படையாகவே தெரிகிறது.
இந்த நிலையில்தான் திமுகவின் தீவிர அனுதாபியும், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளருமான சுப. வீரபாண்டியன் இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் இலக்கியத்தில் உள்ள வஞ்சப்புகழ்ச்சி அணியை பயன்படுத்தி திமுகவின் சமூக நீதியை தமிழக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் என்பதை உணர்ந்ததும் அவர் மீது கோபம் கொப்பளிக்க பாய்ந்துள்ளார்.
“பா. ரஞ்சித்தின் இந்த அறிக்கை ஒருவிதமான விஷமத்தனத்தை கொண்டிருக்கிறது. திமுகவில் மட்டும்தான் சாதிய பாகுபாடு, சாதிப் பிரச்சனை இருக்கிறது. அது சவாலாகவும் உள்ளது என்று கூறுவது உள்நோக்கம் கொண்டது. சமூக நீதிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் திமுகவை இழிவு படுத்துவதற்கு திமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவரே அதற்கு எதிராக திரைப்படம் எடுப்பாரா?…” என்று கேள்வி எழுப்பி காட்டமாக கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.
அவருடைய இந்த கேள்வி நியாயமான ஒன்றுதான் எனக் கருத தோன்றும். என்றபோதிலும் இதில் மாறுபட்ட கருத்துகளும் எழுவதையும் பார்க்க முடிகிறது.
“இயக்குனர் பா ரஞ்சித் திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சமூக நீதிக்கு எதிராக நடந்த பல்வேறு சம்பவங்களை அசைபோட்டுப் பார்த்து அதன் அடிப்படையில் இப்படி சொல்லியிருக்கலாம்” என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.
“ஏனென்றால் 2021ம் ஜூலை 31-ம் தேதியன்று அமைச்சர் ராஜகண்ணப்பன் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை, தனக்கு சரிக்குச் சமமாக உட்கார வைக்காமல் பிளாஸ்டிக் நாற்காலியை போட்டு உட்கார வைத்து பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இத்தனைக்கும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கத்தான் திருமாவளவன் சென்றிருந்தார்.
அதேபோல, ராஜ கண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் பணிபுரியும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை, ஜாதியைச் சொல்லி திட்டியதாக கூறப்பட்டது, மிகப்பெரிய அளவில் பரபரப்பை கிளப்பியது.
இதேபோல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய பெண் தலைவரை, ஏம்மா நீ எஸ்.சி.தானே என்று மேடையிலேயே கேட்டது பெரும் பேசுபொருளானது.
அதேமாதம் சென்னையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனை
தங்களது கோரிக்கை நிமித்தமாக சந்திக்க சென்ற தென்காசி தனித் தொகுதி எம்பி தனுஷ்குமாரையும், குறவர் சமூகத்தை சேர்ந்த வன வேங்கை கட்சி தலைவர் இரணியனையும் வெகுநேரம் நிற்க வைத்தே அவர் பேசி அனுப்பியதும் இந்த நிகழ்வின்போது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கால் மேல் கால் போட்டுக் கொண்டு பேசியதும் கடும் விமர்சனத்திற்கும் உள்ளானது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட அவலம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி வெளியுலகிற்கு தெரியவந்தது. தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த கொடூர சம்பவத்தில் இதுவரை குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை.
கடந்த ஜனவரி மாத இறுதியில் சேலம் மாவட்டம் திருமலைகிரி கிராமத்தில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட சென்ற பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவருடைய பெற்றோர் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியவர், சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் ஆவார்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் அப்போது வைரலானது. என்றபோதிலும் இதை முதலில் திமுக தலைமை கண்டு கொள்ளவில்லை. ஆனால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்ததால் நான்கு நாட்களுக்குப் பின்பு திமுக நிர்வாகி மாணிக்கம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன் பிறகே அவர் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்கு பிறகே அனைத்து தரப்பு மக்களும் மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிட அனுமதிக்கப்பட்டனர்.
சமூக நீதிக்கு எதிரான இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இதற்கு முன்பு நடக்கவே இல்லையா?என்ற கேள்வி எழலாம். ஆனால் தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக, நாங்கள் சமூக நீதியை உயர்த்திப் பிடித்து வருகிறோம் என்று கூறும் திமுக ஆட்சியில் இது போன்ற நிகழ்வுகளே நடக்கக் கூடாது என்பதுதான் இயக்குனர் பா ரஞ்சித் போன்றவர்களின் விருப்பமாகவும் எண்ணமாகவும் இருக்கலாம். ஆனாலும் மாநிலத்தில் சமூக நீதிக்கு எதிரான சம்பவங்கள் திமுக ஆட்சியில் தொடர்ந்து பரவலாக நடப்பது அவருக்கு மன உறுத்தலையும், வேதனையையும் தந்திருக்கும் வாய்ப்புகளே அதிகம்.
அதனால்தான் சாதி பாகுபாட்டை களைவதற்கான வேலையை இத்திரைப்படத்தின் வாயிலாக உதயநிதி ஆரம்பிப்பார் என்று நம்பிக்கை கொள்வோம் என்று பா. ரஞ்சித் கூறியிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகிறது”என அந்த சமூக நல ஆர்வலர்கள் காரணங்களை அடுக்குகின்றனர்.