ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; மீண்டும் சிக்கிய தடயம்; ஹாட் ஸ்பாட் ஆன வெங்கத்தூர்,..

Author: Sudha
22 July 2024, 9:41 am

சென்னையில் கடந்த ஜூலை 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ரவுடி திருவேங்கடம் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்த போது போலீசாரை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றதால் போலீசாரால் என்கவுண்டர் செய்யப் பட்டார்.

போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் அவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்களையும் அதிமுக முன்னாள் நிர்வாகியும், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினருமான ஹரிதரனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து, செம்பியம் தனிப்படை போலீசார் ஹரிதரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் செல்போன்களை சேதப்படுத்தி வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்தார்

இதனையடுத்து, நேற்று முன்தினம் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில், மெரினா கடற்கரை மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கினர். முதல் நாள் நீரில் மூழ்கி தேடுதலில் ஈடுபட்டதில் 4 செல்போன்களின் பாகங்கள் மட்டும் தனித்தனியாகக் கிடைக்கப்பெற்றது.

வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் 2வது நாளாக, மீட்புக் குழுவினர் நேற்று தேடுதலில் ஈடுபட்ட போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் ஒரு செல்போனின் உதிரி பாகங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை தேடுதல் பணியைத் தொடங்கினர். சுமார் 6 மணி நேர தேடுதலுக்குப் பிறகு மதியம் மேலும் மற்றொரு செல்போனின் பாகங்கள் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து மீட்கப்பட்ட செல்போன்களை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.இதனையடுத்து தேடுதல் பணியை மீட்புக் குழுவினர் நிறைவு செய்தனர்.

தொடர்ந்து மீட்கப்பட்டுள்ள செல்போனின் ஐஎம்இஐ (IMEI number) எண்ணைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு கண்டுபிடித்தால் அந்த சிம்கார்டிற்கு எந்தெந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. இதிலிருந்து எந்த எண்ணிற்கு அழைப்பு சென்றுள்ளது என்பதைப் போன்ற முழு விவரமும் தெரிய வரும் மேலும் குற்றவாளிகள் பற்றிய தகவல் வெளியாகும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!