மலக்குழி மரணத்தால் பரிதவிக்கும் மார்க்சிஸ்ட் எம்பி : இறங்கி அடித்த நிர்மலா சீதாராமன்!
Author: Udayachandran RadhaKrishnan18 June 2023, 8:25 pm
மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் சமீபகாலமாக அடிக்கடி ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. அது அவருக்கு தர்ம சங்கட நிலையை ஏற்படுத்தினால் அதற்கு பதில் அளிக்காமல் சாமர்த்தியமாக அப்படியே நழுவி விடுவார். ஆனால் தனிப்பட்ட முறையில் அவருடைய பெயரை யாராவது கட்சியுடன் இணைத்துப் பேசிவிட்டால் போதும். அப்படியே கோபம் கொப்பளிக்க பொங்கி எழுவார்.
கீழடியில் நடிகர் சூர்யா குடும்பம்
கடந்த ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு நடிகர் சிவகுமார், அவருடைய மனைவி மற்றும் மகனும் நடிகருமான சூர்யா, மனைவி ஜோதிகா அவருடைய மகன்,மகள் என ஆறு பேரை வெங்கடேசன் தனது எம்பி பதவியின் சிறப்பு சலுகையை பயன்படுத்தி அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தார்.
இதில் வேதனையான விஷயம் என்னவென்றால் அருங்காட்சியகத்தின் நுழைவு வாயில் திறக்கப்படுவதற்கு ஒரு மணி நேரம் முன்பாகவே நடிகர் சூர்யா குடும்பத்துடன் உள்ளே நுழைந்ததாக கூறப்படும் வெங்கடேசன் 10.30 மணிக்குத்தான் அவர்களுடன் வெளியேறி இருக்கிறார்.
அவர்கள் அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே போகும் வரை நூற்றுக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ மாணவிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் சுட்டெரிக்கும் கோடை வெயிலில் சுமார் ஒரு மணிநேரம் வெளியே கால் கடுக்க காத்து கிடந்துள்ளனர். ஆனால் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் வெங்கடேசன் எம்பியும், நடிகர் சூர்யா குடும்பத்தினரும் தாங்கள் வந்த வாகனத்தில் அங்கிருந்து விரைந்து சென்று விட்டனர்.
வாயை திறக்காத எம்பி
இதுதொடர்பான செய்தியும், வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சமூக நீதி போராளிகள் என்று கூறிக் கொள்ளும் இவர்களுக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியவில்லையே என்ற கேள்விக்கணைகளும் எழுப்பப்பட்டது. ஆனால் இதற்கு நடிகர் சூர்யாவோ, வெங்கடேசன்
எம்பியோ இதுவரை எந்த விளக்கமும் அளித்ததாக தெரியவில்லை.
இந்த நிலையில்தான் சு வெங்கடேசன், இன்னொரு சர்ச்சையில் சிக்கிருக்கிறார்.
இதுவும் மனிதாபிமானம் குறித்த ஒரு துயரமான விஷயம்தான்.
சீறிப் பாய்ந்த பாஜக பிரமுகர்
தமிழக பாஜகவின் மாநில செயலாளராக பதவி வகிக்கும் எஸ்.ஜி.சூர்யா சமூக வலைத்தளங்களில் தீவிரமாக செயல்படுபவர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து பதிவு செய்தும் வருபவர்.
கடந்த 7-ம்தேதி இரவு 8 மணிக்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.ஜி.சூர்யா, ஒரு பதிவை வெளியிட்டார். அதில், “மதுரை பெண்ணாடம் பேரூராட்சியில் 12-வது வார்டு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர் விஸ்வநாதனால் தூய்மை பணியாளர் ஒருவரின் உயிர் பறிபோனது. இதில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்.
எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா? பிரிவினைவாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்திக் கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே” என கடுமையாக விமர்சித்திருந்தார்.
இத்தனைக்கும் அதே நாள் காலை 11 மணி அளவில் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத்தின் தலைவர் மா.வெங்கடேசன் தனது ட்விட்டர் பதிவில் “மலம் கலந்த கழிவு நீரில் இறங்கி கட்டாயப்படுத்தி வேலை செய்யச் சொல்வது சட்டப்படி குற்றம். இதன் காரணமாகவே அரிப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தவர் பின்னர் இறந்தார். இதைச் செய்ய சொன்னது, பெண்ணாடம் பேரூராட்சி 12-வது வார்டு உறுப்பினரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த நாதன் என்கின்ற விஸ்வநாதன். இவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும் பரிந்துரைத்துள்ளேன்.
வார்டு உறுப்பினர் தன் கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும் கழிவுநீரில் இறங்கி இறந்தவர் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்ணையும் வாயையும் மூடிக்கொண்டு இருக்கிறார்” என்று காட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.
எஸ்ஜி சூர்யா கைது
இதனால் இப்பதிவை படித்து பார்த்த பின்புதான் எஸ் ஜி சூர்யா, மதுரை மார்க்சிஸ்ட் எம்பி வெங்கடேசன் என்றதும் சற்று உணர்ச்சிவசப்பட்டு கடலூர் பெண்ணாடம் என்பதற்கு பதிலாக மதுரை பெண்ணாடம் என்று தவறுதலாக புரிந்து கொண்டு ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.
ஊர் பெயரையும், மாவட்டத்தின் பெயரையும், சரித்திர சம்பவங்களையும் குறிப்பிடுகிறபோது தவறுதலாக பேசுவதும், எழுதுவதும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே உள்ள ஒரு பொதுவான குறைபாடு. ஆனால் இந்த துயர சம்பவம் தனது மதுரை தொகுதிக்குள் நடந்திருப்பதாக பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா வேண்டுமென்றே கூறியிருக்கிறார் என்று கருதி அவர் மீது மதுரை சைபர் கிரைம் போலீசில் வெங்கடேசன் எம்பி புகார் அளித்திருக்கிறார்.
ஆனால் இதை போலீசார் முதலில் கண்டுகொண்டதுபோல் தெரியவில்லை. கடலூர் பெண்ணாடம் என்று குறிப்பிடுவதற்கு பதிலாக மதுரை பெண்ணாடம் என தவறுதலாக பதிவிட்டு இருக்கிறார். இது பெரியதொரு குற்றமல்ல என்று போலீசார் அந்த புகாரை ஏற்றுக் கொள்ளாமல் இருந்திருக்கலாம்.
ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட பிறகு இந்த புகாரின் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து எஸ் ஜி சூர்யா மீது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, இரு பிரிவினர் இடையே பகையை ஏற்படுத்துதல், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 5க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து அதிரடியாக கைது செய்து சிறையிலும் அடைத்து விட்டனர். கைதானவர் பாஜகவின் மாநில செயலாளர் என்பதால் இது டெல்லி பாஜக தலைமைக்கு கடும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தி விட்டது.
கொதித்தெழுந்த மத்திய அமைச்சர் நிர்மலா
உடனடியாக இதுகுறித்து தமிழகத்தை சேர்ந்தவரான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தனது ஒரு சமூக ஊடகப் பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டுள்ளார். அவர் கைது கண்டனத்துக்குரியது. மலக்குழி மரணங்களின் மீது தமிழக முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்காமல், அதைப்பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி. சூர்யாவை தண்டிக்க முயற்சி எடுப்பது நியாயமா?
தமிழக முதலமைச்சர் உடனடியாக சூர்யாவை விடுதலை செய்யவேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மலக்குழியை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரை கட்டாயப்படுத்தியவர் சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர் என்பதால், பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, சிபிஎம் கட்சியின் மதுரை எம்.பி.யை விமர்சித்துள்ளார். அந்த விமர்சனத்தில் ஆட்சேபிக்கும் படியாக ஒரு வார்த்தைகூட இல்லை. இருந்தும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதால் முதலமைச்சர் ஸ்டாலின் சகிப்பின்மையுடன் நடந்து கொண்டுள்ளார். அவர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். 1975-ல் அவசரநிலைக்கு எதிராக போராடிய நாங்கள் இப்போதும் போராடுவோம். நீங்கள் தவறான இலக்கை தேர்ந்தெடுத்துள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
வைரமுத்து பாணியில் எம்பி கேள்வி!!
ஆனால் கவிஞர் வைரமுத்து போல, தமிழில் சொல்லாடலை பயன்படுத்துவதில் கைதேர்ந்த எழுத்தாளரான சு.வெங்கடேசன் எம்பி, இந்த விவகாரம் டெல்லி வரை சென்று விட்டதே என்று கருதினாரோ என்னவோ உடனடியாக டுவிட்டரில் அவர், “பொய்யையும், பீதியையும் பரப்புவதா ஒன்றிய அமைச்சர்களின் வேலை? மதுரை மாவட்டத்தில் பெண்ணாடம் என்ற பேரூராட்சி இருக்கிறதா? எனப் பார்த்துவிட்டு கூட கருத்துச்சொல்ல முடியாதா? வதந்தி உங்களின் ஆயுதம்.
உண்மை எங்களின் கவசம்” என்றும் மற்றொரு பதிவில் “மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லையே என்பதை தாண்டிச் செல்வது பொய்க்கு துணை போவதில்லையா, பீதிக்கு உதவி செய்வதில்லையா? மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களே! ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அபாண்ட பழி சுமத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா? உண்மையை கடப்பதும் பொய்யின் மாறுவேடமே” என்று கொந்தளித்து உள்ளார்.
சவுக்கு சங்கர் சரமாரி கேள்வி
இதைப் பார்த்ததும் பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் தனது டுவிட்டர் பதிவில் பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யாவுக்கு ஆதரவாக “இதுல என்ன சமூக பதட்டம் வந்துருச்சு வெங்கடேசன்? அது மதுரை பெண்ணாடம் இல்லை. கடலூர் பெண்ணாடம். அவ்வளவுதானே? என்ன பதட்டமாகி வன்முறை நடந்து விட்டது? இங்க இருப்பவர்களை பார்த்தால் முட்டாள்கள் மாதிரி தெரிகிறதா? சம்பவமே நடக்காதது போல கட்டமைக்க முயல்வது இன்னும் மோசடி. இப்படிப்பட்ட மோசடியில் போலி கம்யூனிஸ்டுகள்தான் இறங்குவார்கள். உண்மையான கம்யூனிஸ்ட் இறந்த தொழிலாளிக்கு நியாயம் தேடித் தருவான்.
கடலூர் பெண்ணாடத்தில் இறந்த சுத்திகரிப்பு தொழிலாளி மரணத்துக்கு யார் காரணம் என சொல்லுங்கள் வெங்கடேசன். வார்த்தை விளையாட்டுகள் ஒரு எம்பிக்கு அழகல்ல” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மூத்த அரசியல் நோக்கர்கள் ஒரு பழைய சம்பவத்தை நினைவு படுத்துகிறார்கள். அவர்கள் கூறுவது இதுதான்.
லீலாவதி கொலை
“மதுரை வெங்கடேசன் எம்பிக்கு 1997ம் ஆண்டு மதுரை நகரில் நடந்த ஒரு படுகொலை சம்பவம் கண்டிப்பாக நினைவில் இருக்கும். ஏனென்றால் அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் தேதி, மதுரை மாநகராட்சியின் 59-வது வார்டு கவுன்சிலரான வில்லாபுரம் லீலாவதி பட்டப்பகலில் அப்பகுதி திமுக பிரமுகர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட 6 பேர் அவரை வெட்டிச் சாய்த்த துயர நிகழ்வு அரங்கேறியது.
இத்தனைக்கும் தனது வார்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இலவச குடிநீர் வழங்க ஏற்பாடு செய்த ஒரே காரணத்திற்காக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த லீலாவதி கொல்லப்பட்டார். அப்போது, சு.வெங்கடேசன் இளைஞராக இருந்திருப்பார். அந்த கொடிய சம்பவம் இன்றும் அவருடைய மனதை விட்டு அகன்று இருக்காது.
லீலாவதி கொலை வழக்கில் முத்துராமலிங்கம் கருமலையன், முருகன், மருது, சோங்கன், மீனாட்சி சுந்தரம் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு
மதுரை கீழ் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. குற்றவாளிகள் மேல்முறையீட்டுக்குச் சென்றனர். 2003-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்தது. பின்னர் திமுக ஆட்சியின் போது 2008-ம் ஆண்டில் அண்ணா பிறந்த நாளையொட்டி குற்றவாளிகள் அத்தனை பேரையும் விடுதலை செய்தது. இதில் மருது என்பவர் மட்டும் 2015ம் ஆண்டு மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையான சமூகப் போராளி
இந்த பழைய நினைவுகளை எல்லாம் மார்க்சிஸ்ட் எம்பி மதுரை சு வெங்கடேசன் ஒரு நிமிடம் மனதில் மீண்டும் ஓடவிட்டு தற்போதைய நிகழ்வுடன் ஒப்பிட்டு பார்த்தால் பெண்ணாடம் பேரூராட்சியில் நடந்த துயரம், தான் ஒரு உண்மையான சமூகப் போராளி என்பதை அவருக்கு ஞாபகப்படுத்தி விடும்.
அதனால் பாஜக மாநில நிர்வாகி எஸ்ஜி சூர்யா தன்னைப் பற்றி வைத்த விமர்சனத்தை பெரிது படுத்த விரும்பாத அளவிற்கு அவருடைய மனமும் பக்குவப்பட்டு படும்” என்று அந்த மூத்த அரசியல் நோக்கர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.