அதிமுகவின் இந்த நிலைமைக்கே காரணம் அவங்க தான் : பழிபோடும் துரை வைகோ!!
Author: Babu Lakshmanan6 February 2023, 8:38 am
மதுரை : அதிமுக பிளவுக்கு காரணமே பாஜக தான் என்று மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
மாமன்னர் திருமலை நாயக்கரின் 440வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோடு பகுதியில் உள்ள திருமலை நாயக்கரின் முழு உருவ சிலைக்கு மதிமுக தலைமை கழக செயலாளர் துரைவைகோ, நாயுடு மகா ஜன சங்க மாநில பொதுச் செயலாளர் ஸ்ருதி ரமேஷ், மாநகர மேயர் இந்திராணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
பின்னர் துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது :- மதுரையை தலைநகராக கொண்டு திருச்சி முதல் கன்னியாகுமரி வரை தென் தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழா இன்று. அவர் சிறந்த மக்கள் பணி செய்து அனைத்து மக்களாலும் போற்றக்கூடிய வகையில் மக்களின் மனநிலையை ஆண்ட மாமன்னர்.
அன்றைய காலத்திலேயே ஒரு சமூக நல்லுணர்வு ஏற்பட இந்த இஸ்லாமிய மக்களிடையே ஒற்றுமை உணர்வு ஓங்கிட பாடுபட்டவர். இஸ்லாமிய மக்கள் போற்றும் வகையில் பள்ளிவாசல்களை கட்ட இலவசமாக நிலங்களை தானமாக கொடுத்தவர்.
அதே வகையில், இந்து மக்களும் பாராட்டக்கூடிய வகையில் பல கோயில்களை கட்டியவர். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் திருக்கோயிலையும் புனரமைத்து திருப்பணி செய்தவர்.
அந்த காலகட்டங்களிலேயே தென் தமிழகத்தில் சாலைகளை இணைக்கும் அரும்பணியை செய்தவர். இப்படி பல சிறப்பு வாய்ந்த பல பணிகளை செய்த மாமன்னர் திருமலை நாயக்கரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு மாலை அணிவித்து சிறப்பு செய்தது பெருமையாக உள்ளது என்றார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கள் கூட்டணியில் உள்ள வேட்பாளர் ஈவிகே எஸ் இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவரது மகன் ஒன்றரை வருடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும், ஏழை எளிய மக்களிடம் எளிமையாக பழகியவர். உதவிகள் பல செய்தவர். பெரியார் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் நிற்கிறார். அவருக்கு ஈரோடு தொகுதி மக்கள் மிகப்பெரிய வெற்றியை தருவார்கள், எனக் கூறினார்.
பிளவு பட்ட அதிமுகவை ஒன்றிணைக்கும் வேலையை பாஜக செய்கிறதா என்ற கேள்விக்கு, அதிமுக பிளவுக்கு காரணமே பாஜக தான். எம்ஜிஆர் உருவாக்கி கட்டிக் காத்த இயக்கம். இந்த இயக்கம் பிளவுபட காரணமானவர்களை அதிமுகவினர் உணர வேண்டும், என்றார்.
புகையிலைப் பொருட்களுக்கு உயர்நீதிமன்றம் தடையை நீக்கியது குறித்த கேள்விக்கு,
உணவு பொருள் பாதுகாப்பு சட்டத்துக்குள் புகையிலை வராது. இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இந்த புகையிலைப் பொருட்களை தடை செய்ய ஒரு புதிய சட்டம் கொண்டுவர முயற்சி செய்யவேண்டும். அல்லது அவற்றை வலு சேர்க்கும் வகையில் ஒரு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும். அதேபோல புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யக்கூடிய கடைக்காரர்களுக்கு கடமை உணர்வு இருக்கிறது. கடமை உணர்வை உணர்ந்து அவர்கள் செயல்பட வேண்டும் என்றார்.
மேலும், புகையிலை பொருட்கள் தடைச் சட்டம் மறுபடியும் தமிழக அரசு கொண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளது, எனக் கூறினார்.