தீவிரவாதியைப் போல நடத்துவதா…? திடீரென குரல் கொடுக்கும் வைகோ.. I.N.D.I.A. கூட்டணிக்கு இழுக்க முயற்சியா?

Author: Babu Lakshmanan
18 September 2023, 4:59 pm

முன்னாள் முதலமைச்சரை தீவிரவாதியைப் போல கைது செய்ததற்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு அவர்கள் ‘ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தவறான ஆட்சியைக் கேள்விக்கு உள்ளாக்கியதற்காக, தாம் விரைவில் கைது செய்யப்படக்கூடும்’ என்று செப்டம்பர் 9- ஆம் தேதி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ராயதுர்கம் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும் போது குறிப்பிட்டார்.

ஆந்திராவில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக இருந்த போது, திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ஊழல் நடந்ததாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் சந்திரபாபு நாயுடுவை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அவர் விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார். ஒருவேளை குற்றம் நடந்திருந்தால்கூட, விசாரணை நடத்தி, சட்டப்படி அறிவிப்பாணை வழங்கி, முறைப்படி கைது செய்திருக்க வேண்டும். அதை விடுத்து, முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரை ஒரு தீவிரவாதி போல கைது செய்தது கண்டனத்துக்குரியது.

அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார், என்று குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, சந்திரபாபு நாயுடுவின் கைதுக்கு I.N.D.I.A கூட்டணியும் எதிர்ப்பை பதிவு செய்திருந்தது. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு செல்ல சந்திரபாபு நாயுடு முயற்சி செய்த நிலையில், பாஜக அதனை விரும்பவில்லை. இதனிடையே, ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சைலண்டாக பாஜகவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். உதாரணமாக, மாநிலங்களவையில் பாஜகவுக்கு ஆதரவான செயல்பாட்டை கடைபிடித்து வருகின்றனர்.

எனவே, சந்திரபாபு நாயுடுவை தங்கம் பக்கம் இழுக்க I.N.D.I.A. கூட்டணி திட்டமிட்டுள்ளதாகவும், அந்த வகையில், வைகோ குரல் கொடுத்துள்ளார். எனவே, I.N.D.I.A. கூட்டணியில் 29ஆவது கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 312

    0

    0