முதலமைச்சர் ஸ்டாலினுடன் பாமக தலைவர் அன்புமணி மரியாதை நிமித்தமாக சந்திப்பு : இளைஞரணித் தலைவர் யார் என சூசகப் பேட்டி!!
Author: Udayachandran RadhaKrishnan29 May 2022, 12:33 pm
சென்னையில் நேற்று நடந்த பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவரை அன்புமணி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, பாமகவின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி உடனிருந்தனர்.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தலைவராக பொறுப்பேற்றதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். அவரும் வாழ்த்தினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு, அரசியல் எதுவும் பேசவில்லை.
பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு குறித்து இதுவரை முடிவு செய்யவில்லை. கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாவட்டமாக, கிராமமாக சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளேன் என கூறினார்.