மீண்டும் மெகா அறிவிப்பு… விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
Author: Udayachandran RadhaKrishnan17 September 2023, 11:51 am
மீண்டும் மெகா அறிவிப்பு… விடுபட்ட விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வாய்ப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!
2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக தேர்தல் வாக்குறுதியாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்து இருந்தது.
அதன்படி, கடந்த பட்ஜெட் தொடரின் போது, முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, திட்டத்தைச் செயல்படுத்த 7,000 கோடி ரூபாய் பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து, காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15 ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டப் பயனாளிகளுக்கு திட்டத்தின் ஏடிஎம் அட்டையின் மாதிரியை வழங்கி திட்டத்தைத் துவங்கி வைத்தார். மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசின் ஆயிரம் ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தொடங்கி வைக்கப்பட்டது.
விண்ணப்பங்கள் பதிவேற்றம், அதன் மீதான ஆய்வு உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடித்து 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், மதுரை சின்னசொக்கிகுளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, அண்மையில் மறைந்த தொல்லியல் ஆய்வாளர் பொ.ராஜேந்திரன் புகழஞ்சலி கூட்டத்தில் பங்கேற்று புகழஞ்சலி செலுத்தி உரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாமல் போனவர்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உண்டு. உண்மையான தேவை உடையவர்கள் யாராக இருந்தாலும் விட்டுப்போகக் கூடாது என்பதே நோக்கம்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கு முழு தகுதி இருந்தும் அவர்களது பெயர்கள் விடுபட்டு போயிருந்தால் அவர்களுக்கான குறைதீர்ப்பதற்கான அமைப்பு முறையை உருவாக்க முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார். தாலுகா அளவில் இதற்கான உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
ஏதேனும் காரணத்தால் திட்டத்தில் விண்ணப்பிக்க முடியாமல் விடுபட்டு போயிருந்தால் உதவி மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம். இதற்கான உதவி மைய தொலைபேசி எண்கள் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்படும். இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏழைகள் தவிர்க்கப்படவில்லை. யாருக்கெல்லாம் தேவை இருக்கிறதோ அவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது” என்று தெரிவித்தார்.