கருணாநிதி காலத்து ஸ்டெயில் இப்ப வேலைக்காகாது… இப்படியே போனா அவ்வளவுதான்.. முதலமைச்சர் ஸ்டாலினை எச்சரித்த டிடிவி தினகரன்…!!
Author: Babu Lakshmanan21 March 2022, 6:48 pm
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கை தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் அணையைக் கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த மாதம் அம்மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டி ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழகத்திற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், அண்மையில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில், மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து, அணை கட்டுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இது தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சியினரிடைய அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனிடையே, கர்நாடகா அரசின் இந்த நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக, தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு மத்திய அரசை வலியுறுத்தி தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது என்று அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- மேகதாதுவில் அணை கட்டுவதற்கு நிதி ஒதுக்கி கர்நாடக அரசு பணிகளைத் தொடங்கிவிட்ட பிறகு, மிகத் தாமதமாக தூக்கம் கலைந்து விழித்துள்ள திமுக அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது. ஆனால், கடிதம் எழுதுவது, தீர்மானம் நிறைவேற்றுவது என்கிற கருணாநிதி காலத்து நடைமுறைகளை மட்டும் வைத்துக்கொண்டு, தமிழகத்தின் நலனை திமுகவின் வழக்கப்படி இம்முறையும் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது.
நாடாளுமன்றத்தில் அதிக எம்.பி.க்களை வைத்திருக்கிறதோடு, தமிழகத்தின் ஆட்சி அதிகாரத்தையும் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து மேகதாது அணையைத் தடுத்து நிறுத்த வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.