மேகதாது அணை விவகாரம்… கர்நாடகத்திற்கு தடை விதிக்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!!
Author: Udayachandran RadhaKrishnan8 July 2023, 3:59 pm
தமிழ்நாட்டின் ஒப்புதலும், உச்சநீதிமன்றத்தின் அனுமதியும் இல்லாமல் மேகதாது அணையை கர்நாடகம் கட்ட முடியாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தேவையான அனுமதிகளை விரைவாகப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்; நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருக்கிறார். மேகதாது அணை சிக்கல் குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், இரு மாநிலங்களின் உழவர்களிடையே பகையை ஏற்படுத்தும் வகையில் சித்தராமையா பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது.
கர்நாடக மாநிலத்திற்கான 2023-24 ஆண்டு நிதிநிலை அறிக்கையை அம்மாநில முதலமைச்சரும், நிதியமைச்சருமான சித்தராமையா அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்து உரையாற்றினார். மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசிடம் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக குறிப்பிட்ட அவர், அதனடிப்படையில் மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலை விரைவாகப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். வனத்துறை நிலத்தில் தான் அணை கட்டப்படுகிறது என்பதால், அதனால் அழிக்கப்படும் வனத்திற்கு மாற்றாக புதிய வனப்பகுதிகளை உருவாக்கத் தேவையான நிலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், அவற்றைக் கையகப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
இரு மாநிலங்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய திட்டம் மத்திய அரசின் ஆய்விலோ, உச்சநீதிமன்றத்தின் விசாரணையிலோ இருக்கும் போது, அத்திட்டம் தொடர்பான எந்தப் பணிகளையும் மேற்கொள்ளாமல் இருப்பது தான் அறம் ஆகும். ஆனால், மேகதாது அணைக்கு அனுமதி அளிப்பது குறித்து விவாதிக்கக் கூடாது என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கும் நிலையில், மேகதாது அணை கட்டுவது தொடர்பான அடுத்தடுத்த நடவடிக்கைகளை கர்நாடக அரசு மேற்கொண்டு வருவது நியாயமல்ல. அது தமிழகம் & கர்நாடகம் இடையிலான உறவுகளை பாதிக்கும்.
உச்சநீதிமன்றத்தின் தடையை சிறிதும் மதிக்காத கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணைக்காக ஏற்கனவே ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதைக் கொண்டு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்துங்கள்; மேகதாது அணை உள்ளிட்ட பாசனத் திட்டங்களுக்காக நிதி திரட்டுங்கள் என்று அதிகாரிகளுக்கு ஆணையிட்டார். அவரைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்துதல் பணியும், திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பணியும் விரைவுபடுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கை உரையில் முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, குறுவை சாகுபடிக்காக ஜூன், ஜூலை மாதங்களில் காவிரியில் திறக்கப்பட வேண்டிய நீரை கர்நாடக அரசு இதுவரை திறந்துவிடவில்லை. அதனால், குறுவை சாகுபடிக்கு போதிய நீர் கிடைக்காமல் தமிழக உழவர்கள் வாடிக் கொண்டிருக்கும் நிலையில், மேகதாது அணை கட்டுவதற்காக நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் போவதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருப்பது தமிழக உழவர்களின் உணர்வுகளை கடுமையாக பாதிக்கும்.
அதுமட்டுமின்றி, மேகதாதுவில் அணை கட்டுவது சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தி விடும். கர்நாடக அரசு ஏற்கனவே தயாரித்துள்ள விரிவான திட்ட அறிக்கையின்படி, மேகதாது அணை மொத்தம் 12,979 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது. அதில் 12,345.40 ஏக்கர் பகுதியில் நீர் தேக்கி வைக்கப்படும். நீர்த்தேக்கப்பகுதிகளில் சுமார் 11,845 ஏக்கர் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதி ஆகும். இதனால் சுற்றுச்சூழலுக்கு சரி செய்ய முடியாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். அதனால், இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி தர முடியாது. இதை உணர்ந்தும் கூட, மேகதாது அணை கட்டப்படும் நிலப்பரப்புக்கு ஈடான நிலங்களை கையகப்படுத்தி, அங்கு காடு வளர்க்கப் போவதாக கர்நாடகம் கூறுவது மத்திய அரசின் மீது தேவையற்ற அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும். அது மேகதாது சிக்கலில் தமிழகத்துக்கு எதிராக முடிவெடிக்க மத்திய அரசைத் தூண்டும்.
கர்நாடகத்தில் காவிரியின் துணையாறுகளின் குறுக்கே கபினி, கேஆர்எஸ், ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட பெரிய அணைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் கட்டப்பட்டுள்ளன. மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி அணையில் 19.52 டிஎம்சி, ஹேரங்கி அணையில் 8.50 டிஎம்சி, ஹேமாவதி அணையில் 37.10 டிஎம்சி கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையில் 49.45 டி.எம்.சி என மொத்தம் 114.57 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்படும் நிலையில், மேகதாது அணையும் கட்டப்பட்டு அதில் சுமார் 70 டி.எம்.சி தண்ணீர் தடுக்கப்பட்டால் காவிரிப் படுகை பாலைவனமாக மாறுவது உறுதி. தமிழ்நாட்டின் ஒப்புதலும், உச்சநீதிமன்றத்தின் அனுமதியும் இல்லாமல் மேகதாது அணையை கர்நாடகம் கட்ட முடியாது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அவற்றில் தீர்ப்பளிக்கப்படும் வரை மேகதாது அணை தொடர்பான எந்தப் பணியையும் கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது என்று மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அன்புமணி கூறியுள்ளார்.