விஸ்வரூபம் எடுத்த மேகதாது அணை விவகாரம்… காங்கிரஸ் உடைக்கிறதா…?தமிழக தலைவர்களுக்கு நெருக்கடி!

Author: Babu Lakshmanan
2 June 2023, 7:55 pm

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, நாடு முழுவதும் காங்கிரஸ் தலைவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்திருந்தது. அதேநேரம்
மாநில முதலமைச்சர் பதவி பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கா?… அல்லது கட்சியின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த டி கே சிவகுமாருக்கா?… என்ற சிக்கலான கேள்வி எழுந்தபோது ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுனா கார்கேயும் அதற்கு சுமுகமான தீர்வை கண்டனர்.

அதன்படி சித்தராமையா முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக டி கே சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இன்னொரு பெரிய தலைவலி என்று ராகுல், பிரியங்கா இருவரும் தேர்தல் நேரத்தில் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளான வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், ஒன்றரை கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், பட்டப்படிப்பு முடித்த வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 3000 ரூபாய், டிப்ளமோ படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 1500 ரூபாய் உதவித்தொகை போன்றவற்றை சொல்லலாம்.
ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஒரே வாரத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று முதலமைச்சர் சித்தராமையா உறுதியும் அளித்திருந்தார்.

ஆனால் முதலமைச்சராக அவர் பதவியேற்று இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையிலும் கூட இதற்கான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இதனால் அரசு பஸ்களில் பயணிக்கும் பெண்கள் டிக்கெட் எடுக்காமல் நடத்துனர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டது. இதேபோல 200 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தினர் மின் கட்டணம் செலுத்தாமல் கர்நாடக காங்கிரஸ் அரசை திணறடித்து வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் துணை முதலமைச்சரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி கே சிவகுமார் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் அளித்த மேகதாதுவில் அணை கட்டுவோம். இதற்காக 9000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்ற வாக்குறுதியை கையில் எடுத்திருக்கிறார். விரைவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்படும் என்று அவர் அறிவித்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் உள்ளிட்டோர் தங்களது கடும் கண்டனங்களை பதிவு செய்தனர்.

மாநில காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த டி கே சிவகுமார் தமிழக அரசியல் கட்சிகளையும், மக்களையும் அமைதிப்படுத்தும் விதமாக மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், “மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்தவொரு பாதிப்புமே இல்லை. முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாது அணை கட்ட1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கினார். ஆனால் எந்த ஒரு பணியும் தொடங்கப்படவே இல்லை.

தமிழகத்தின் மீது வெறுப்புடன் நாம் நடந்து கொள்ளவில்லை; தமிழகத்துக்கு எதிராக நாங்கள் யுத்தமும் நடத்தவில்லை. தமிழகத்தில் கன்னடர்களும் கர்நாடகாவில் தமிழர்களும் வசிக்கின்றனர். ஆகையால் வெறுப்புணர்வு என்பதற்கு எந்த இடமும் இல்லை.

மேகதாதுவில் நீர் தேக்கப்பட்டு அது பெங்களூருவுக்கு விநியோகிக்கப்படும். காவிரி நடுவர் மன்றமே இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் யாரும் எந்த பதற்றமும் அடைய தேவை இல்லை. தமிழக அரசுக்கு நாங்கள் இடையூறு செய்யவில்லை. நாங்கள் தாராளமாக நடந்து கொள்கிறோம். நாம் அண்டை மாநிலங்கள். நமது இரு மாநிலங்களும் இதற்கு முன்னர் போதுமான அளவுக்கு மோதிவிட்டோம்; சட்டப் போராட்டங்களை நடத்தி விட்டோம். எதுவும், யாருக்கும் உதவவில்லை. ஆகையால் அமைதியான முறையில் தீர்வு காண்போம். மேகதாது அணையால் காவிரி பாசன விவசாயிகளுக்கு பாசனத்துக்கும் குடிநீருக்கும் பாதிப்பு இல்லை”
என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதற்கும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. திமுக, அதிமுக, பாஜக போலவே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசை அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரசும் உரக்க குரல் கொடுத்திருக்கிறது. கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிப்பதை எதிர்ப்போம். மாநிலத்தின் நலனே எங்களுக்கு முக்கியம் என்று தமிழக காங்கிரஸ் கூறியிருக்கிறது.

ஆனால் உண்மையிலேயே மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளை விட தற்போது கடுமையான நெருக்கடி, தமிழக காங்கிரசுக்குதான் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் காங்கிரஸ் தலைவர் ராகுல், கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றும், அது கர்நாடக மக்களின் வளர்ச்சிக்கு உதவுவதாக அமையும் என்று கூறியிருந்தார்.

எனவே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்தது ராகுலுக்குத் தெரியாது என்று யாராலும் மறுக்க முடியாது.
அதனால் இந்த விஷயத்தை கர்நாடக காங்கிரஸ் தங்களுக்கு சாதகமான பார்க்கும் அம்சங்களே அதிகமாக காணப்படுகிறது.

தவிர மேகதாது அணை கட்டப்பட இருக்கும் கனகபுரா தொகுதியின் எம்எல்ஏவாக இருப்பவரும் டிகே சிவகுமார்தான். இந்த தொகுதி அடங்கிய ராமநகர் மாவட்டம், அவருடைய சொந்த மாவட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்தான் அவர் இந்த விஷயத்தில் மிகவும் தீவிரம் காட்டுகிறார், என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

“மேகதாதுவில் அணை கட்டும் விவகாரத்தை ஆட்சிக்கு வந்த உடனேயே கர்நாடக காங்கிரஸ் கையில் எடுத்திருப்பது தமிழக காங்கிரசுக்கு பேரதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது. ஏனென்றால் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் இப்பிரச்சனையை கர்நாடக காங்கிரஸ் எழுப்பும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, கே வி தங்கபாலு திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ், செல்வப் பெருந்தகை போன்றோர் கருதி இருந்தனர். ஆனால் கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் இப்போதே இதில் தீவிரம் காட்டுவது தமிழகத்தில் அவர்கள் போட்டு வைத்திருந்த தேர்தல் கணக்கை தவிடு பொடியாக்குவது போல் அமைந்து விட்டது” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“அதேநேரம் கர்நாடக காங்கிரஸ் அரசோ 2024 தேர்தலைக் குறி வைத்துதான் மேகதாது அணை விவகாரத்தை இப்போதே கையில் எடுத்து இருக்கிறது என்பதும் உண்மை.

இத்திட்டத்தை இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கி விட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளிலும் வென்று விட முடியும் என்று அம்மாநில காங்கிரஸ் கருதுகிறது. இதனால்தான் தமிழகத்துடன் சுமுகமான உறவை இதில் கடைபிடிக்கலாம் என்று டி கே சிவகுமார் கூறுகிறார்.

ஆனால் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று கூற முடியாது.
மேகதாதுவில் அணை கட்டுவதால், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் விவசாயிகளும், தமிழக அரசும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக, தமிழக அரசு தொடர்ந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலும்
உள்ளது.

இதில் யாருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என்பதை கணிப்பதும் கடினம்.
அதேநேரம் அணை கட்டும் விவகாரங்களில் ஆறு உற்பத்தியாகும் மாநிலம் மட்டுமே தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுத்து விட முடியாது. கீழே உள்ள மாநிலங்களின் சம்மதமும் தேவை என்ற ஷரத்துதான் மிகவும் முக்கியமானது.

அதனால்தான் பிரச்சனைக்கு பேசி தீர்வு காண்போம் என்று கர்நாடக அரசு இப்போது கோரிக்கை வைக்கிறது. என்றபோதிலும் இந்த விவகாரத்தை தீர்த்து வைப்பதில் முக்கிய பங்கு காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கும் உண்டு. மல்லிகார்ஜுன கார்கே முக்கிய தலைவர் என்றாலும் கூட அவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். அதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அவரிடம் மேகதாது பிரச்சினையை எடுத்துச் செல்ல தயங்குவார்கள்.

ஒருவேளை ராகுல், கர்நாடகாவில் நமது கட்சி ஆட்சியில் உள்ளது, தமிழகத்தை விட அங்கு மிக வலிமையாகவும் இருக்கிறது. திமுக கூட்டணியில் இருப்பதால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்து அல்லது ஆறு சீட்டுகள் தருவார்கள். அதற்கு கர்நாடக மாநில காங்கிரஸையே நாம் முழுமையாக நம்பலாம். அந்த மாநிலத்தின் 28 தொகுதிகளையும் கைப்பற்றி விடலாம் என்று ராகுல் காந்தி கணக்கு போடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இது மாதிரியான சூழல் உருவானால், தமிழக காங்கிரஸ் தனித்து விடப்படும் நிலைதான் உருவாகும். இது ஏறக்குறைய 1996-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட அன்றைய பிரதமர் நரசிம்மராவ் எடுத்த முடிவு போல ஆகிவிடவும் செய்யலாம்.

அந்தத் தேர்தலின்போது ஜி கே மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு திமுகவுடன் கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றியை பெற்றது. அதுபோல மேகதாது அணை பிரச்சனையில் கர்நாடகாவுக்கு ராகுல் தனது முழுமையான ஆதரவை தெரிவித்தால் தமிழக காங்கிரசின் மூத்த தலைவர்கள் விரைவில் ‘தமிழர் காங்கிரஸ்’ என்ற கட்சியை தொடங்கி 2024 தேர்தலை சந்தித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஆனால் 1996 ல் கிடைத்தது போன்ற அபார வெற்றி, திமுகவுக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உருவாக்கலாம் என்று கூறப்படும் புதிய கட்சிக்கும் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான்.

ஏனென்றால் அப்போது உச்சகட்ட புகழில் இருந்த நடிகர் ரஜினியும், தமிழ் மாநில காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு தனது வெளிப்படையான ஆதரவை அறிவித்து தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அது போன்ற சூழல் இப்போது நிலவில்லை. தவிர ரஜினிக்கு அன்று இருந்த செல்வாக்கு இன்று இல்லை என்பதும், அவர் அரசியலில் இருந்து ஒதுங்கி நிற்பதும் திமுக கூட்டணியை அவர் ஆதரித்தாலும் கூட அந்த அளவிற்கு வெற்றி கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான்.

மேகதாது அணை விவகாரத்தில், கர்நாடக காங்கிரஸ் அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கைக்கு தமிழகத்தில் பெரும்பாலும் எல்லா கட்சிகளும் ஒரு சேர குரல் கொடுத்தாலும் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் மட்டும் மூச்சு காட்டாமல் அமைதியாக உள்ளன. ஒருவேளை மார்க்சிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரள மாநிலத்தில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் இதே போன்ற நிலை இருப்பதால் மார்க்சிஸ்ட் கப்சிப் ஆகிவிட்டது போல் தெரிகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எது எப்படியோ, கர்நாடக துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் கிளப்பிய மேகதாது அணை விவகாரம், தமிழக காங்கிரஸ் தலைவர்களின் கர்நாடக தேர்தல் வெற்றி கொண்டாட்டத்திற்கு வெகு விரைவிலேயே வேட்டுவைத்து விட்டது என்பது மட்டும் உண்மை!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 413

    0

    0