கள்ளக்குறிச்சி சம்பவம் கடைசியா இருக்கனும் ; இனிமேல்… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

Author: Babu Lakshmanan
21 July 2022, 10:29 am

வேலூர் : மதிப்பெண் பெறுவதற்காக தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுத்தம் அளிப்பதை ஆசிரியர்கள் நிறுத்த வேண்டும் என்று ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த அம்மூரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்கான மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கைத்தறி துணி நூல் துறை அமைச்சர் காந்தி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளிடையே பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கல்வித்துறை அதிகாரிகள் பின்பற்ற வேண்டிய 10 விஷயங்களை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையை சுலபமாக இழந்து விடுவதால் தவறான முடிவுகளை எடுத்து விடுவதாகவும், வெறும் மதிப்பெண்கள் பெறுவது மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதால் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், அதற்காக பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தமிழகத்தின் எதிர்காலம் மாணவர்கள் என்பதை முதல்வர் அறிந்த காரணத்தினால் கல்வி, சுகாதாரத்திற்கு அதிகம் முக்கியத்துவம் அளிப்பதாகவும், குறிப்பாக கல்வித்துறைக்கு 36,895 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்க்க பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அதிகப்படியான அழுத்தத்தை மாணவர்கள் மீது செலுத்துவதை கைவிட வேண்டும் எனவும், ஆசிரியர்கள் தங்களுக்கு பிள்ளைகளைப் போல மாணவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை குறிப்பிட்டு, அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாகவும், இனி வரும் காலங்களில் தனியார் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி