சொந்தக் கட்சி அமைச்சர், எம்எல்ஏவை கேவலப்படுத்திய திமுக கவுன்சிலரின் கணவர் : ஆடியோ வைரலானதால் வந்த பிரச்சனை…!!

Author: Babu Lakshmanan
21 January 2022, 6:29 pm

திருப்பத்தூர் : அமைச்சர் மற்றும் எம்எல்ஏ குறித்து இழிவாக பேசியதாக அதேக் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

மாதனூர் ஊராட்சி ஒன்றியம் கைலாசகிரி 9வது வார்டு திமுக மாவட்ட கவுன்சிலராக இருப்பவர் சரிதா. இவரது கணவர் முத்துக்குமார் வழக்கறிஞராக இருந்து வருகிறார். அண்மையில் நடந்த அரசு விழாவில், கவுன்சிலரான தனது மனைவி சரிதாவுக்கு பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி, அமைச்சர் காந்தி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் ஆகியோரை இழிவாகப் பேசி ஆடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் முத்துக்குமார் பதிவிட்டிருந்தது.

இந்த ஆடியோ வைரலான நிலையில், ஆத்திரமடைந்த திமுகவினர் முத்துக்குமாருக்கு சொந்தமான உணவகத்தை தீ வைத்தனர். அதோடு, அவரை கைது செய்ய வலியுறுத்தி நேற்றிரவு ஆம்பூர் – பேரணாம்பட்டு சாலையில் 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, முத்துக்குமாரை கைது செய்வதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், அவர்கள் கலைந்து சென்றனர்.

இதனையடுத்து, கைலாசகிரி பகுதியில் வீட்டில் இருந்த வழக்கறிஞர் முத்துக்குமாரை உமாராபாத் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் முத்துகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • என் கணவருடைய எனர்ஜி 10 ஆளுக்கு சமம்…வெளிப்படையாக பேசிய நரேஷ் பாபுவின் 4வது மனைவி..!