அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு ; நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
23 August 2023, 1:03 pm

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக திமுக அரசு 2006-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் 2001 முதல் 2006-ம் ஆண்டு வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2020-ம் ஆண்டு அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்தது.

ஏற்கெனவே அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், அமைச்சரின் 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களையும் முடக்கியது. இந்நிலையில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் முக்கிய ஆவணங்கள் இருப்பதால் இந்த வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் யாரும் ஆஜராகவில்லை. மேலும் அமலாக்கத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை செப்.13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம் அமலாக்கத் துறையின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!