‘என்னை ஆள விடுங்க சாமி’… செந்தில் பாலாஜி குறித்த கேள்வி… நழுவிய அமைச்சர் துரைமுருகன்..!!
Author: Babu Lakshmanan4 July 2023, 4:39 pm
தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன், கர்நாடகா அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் வரவேற்பதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்
இன்று மாலை டெல்லி செல்ல உள்ள நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது, அவர் பேசியதாவது:- உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி. கர்நாடக மாநிலத்தில் இருந்து காவேரி நீரை திறந்துவிட வில்லை. ஆகையால், காவரி மேலாண்மை ஆணையத்தின் மூலம் அவர்களுக்கு வலியுறுத்த சொல்லவே எனது டெல்லி பயணம், எனக் கூறினார்.
‘காவிரி நீரை ஒவ்வொரு மாதம் எவ்வளவு வழங்க வேண்டுமோ, அதனை வழங்க வேண்டும் என கர்நாடகா மாநில அரசை கேட்டுக்கொள்கிறேன்’, பருவ மழை குறைவால் தண்ணீர் வழங்க முடியாது என கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்த கருத்துக்கு இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
தொடர்ந்து, பேசிய அவர், கொடுக்க முடியாத காரணத்தை அவர்கள் தெரிவிக்கின்றனர். வேண்டும் என்று நமது காரணத்தை தெரிவிக்கிறோம். நமக்கு கடந்த ஜூன் மாதம் 9.19 டிஎம்சி தண்ணீர் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், 2.833 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே வழங்கி 6.357 டி.எம்.சி நீர் நமக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்துலும் பேச கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்ற ஆணையே உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நாம் ஏன் அதனை கிளர வேண்டும். தடுப்பணை விவகாரத்தில் தமிழக அரசுடன் கர்நாடகா அரசு பேசினால் வரவேற்போம். ஆனால் ஏன் அணை கூடாது என்பதை காரணத்தோடு விளக்கம் கொடுப்போம்.
திட்டமிட்டபடி வரும் 17, 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்குமா..? என்பது பற்றி தனக்கு தெரியாது. மேட்டூரில் திறக்கப்பட்ட தண்ணீர் கடை மடை வரை சென்றுள்ளது. ஆனால் அதுகுறித்து தெரியாமல் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்., எனக் கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு குறித்து கேட்ட போது, ‘என் விசயம் கேட்டிங்க அது போதும், என்னை ஆள விடுங்க,’ எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.