கனிம வளங்கள் கொள்ளையடிப்பா..? அண்ணாமலை நிரூபித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் ; அமைச்சர் துரைமுருகன்..
Author: Babu Lakshmanan17 நவம்பர் 2022, 6:14 மணி
வேலூர் ; தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகக் கூறும்
பாஜக தலைவர் அண்ணாமலை, அதனை ஆதாரத்துடன் நிரூபித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கனிம வளங்கள் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்று நடைபெற்றது. இதில், மாநில கனிம வளங்கள் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று, மகளிர் சுய உதவி குழு கடன், வேளாண் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான வங்கி கடன் உதவிகள் மற்றும் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது :- கூட்டுறவு திட்டம் என்பது சிறப்பான திட்டம் ஆகும். இதில் சிலர் செய்யும் தவறுகளால் கூட்டுறவு நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்படுகிறது. இதனை தடுக்க கூட்டுறவு பணியாளர்கள் நேர்மையுடன் செயல்பட்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு நற்பெயரை ஏற்படுத்த வேண்டும்.
கூட்டுறவு நிறுவனங்களில் 90% நேர்மையுடன் செயல்படுகின்றனர். எனவே கூட்டுறவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் மக்களின் நலன் கருதி முறைகேடு இல்லாமல் நேர்மையுடன் செயல்பட வேண்டும்.
நலிந்த பிரிவினருக்கு உதவி செய்வதற்காக கூட்டுறவு நிறுவனங்கள் பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது ஆனால் அதனை தவறாக பயன்படுத்தக் கூடாது.
கூட்டுறவு சங்கங்களில் பொதுமக்கள் வாங்கியுள்ள கடன்களை திருப்பி செலுத்த வேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு கடன்களை வழங்க முடியும். தேர்தல் நேரத்தில் கடன் தள்ளுபடி செய்வார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2483 பேருக்கு சுமார் 15 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
3000 பேருக்கு ரூபாய் 13 கோடி 28 லட்சம் அளவிற்கு கால்நடை பராமரிப்பு கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 152 பேருக்கு ரூபாய் ஒரு கோடி அளவிற்கு மத்திய கால கடன் வழங்கப்பட்டுள்ளது. என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது :- உச்சநீதிமன்றம் தென்பெண்ணை ஆற்றில் நதிநீர்பங்கீடு தொடர்பாக 4 வார காலத்தில் ஆணையம் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. நீர்வளத் துறை செயலர் டெல்லி சென்றிருப்பதால் அவர் வந்தவுடன், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும், என்று அமைச்சர் கூறினார்.
தமிழகத்தில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘பாஜக தலைவர் அண்ணாமலை ஆதாரத்துடன் நிரூபித்தால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். அண்ணாமலையின் அறிக்கையை நானும் படித்தேன். அதில் எந்தவித உண்மையும் இல்லை, என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
0
0