அவங்கள மாதிரி நாங்க பண்ண மாட்டோம்.. அத்திக்கடவு – அவினாசி திட்டம் இப்படித்தான் இருக்கும் ; அமைச்சர் துரைமுருகன் உறுதி!!
Author: Babu Lakshmanan6 டிசம்பர் 2022, 1:41 மணி
வேலூர் ; அத்திக்கடவு அவினாசி திட்டத்தை அதிமுக அறிவித்ததோடு சரி, எந்த பணிகளை மேற்கொள்ளவில்லை என்று நீர்வளத்துறை துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் உடன் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா,மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது :- அதிமுக ஆட்சிக்காலத்தில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தை அவசரப்பட்டு, அந்த திட்டத்திற்குரிய எல்லா பணிகளையும் முடிக்காமல், ஏதோ நாங்கள் தான் ஆரம்பித்தோம் என சொல்வதற்காக துவக்கி வைத்து விட்டு போய்விட்டார்கள்.
ஒரு ஏரியிலிருந்து மற்றொரு ஏரிக்கு தண்ணீர் செல்வதற்கு குழாய் மூலம் தான் எடுத்துச் செல்ல வேண்டும். பல இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீரை மேல் ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும். இதற்குரிய இடங்கள் பல தனியார் நிலங்களில் உள்ளன. அந்த இடங்களை இன்னும் அரசாங்கம் கையகப்படுத்தவில்லை. அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
இது போன்ற தொடர்பணிகள் உள்ள நிலையில், இதை அப்படியே விட்டுவிட்டு அத்திக்கடவு அவினாசி திட்டம் திறக்க வேண்டும் என்று சொன்னால், நாங்கள் அவர்கள் செய்த அவசரத்தை போல், நாங்களும் அவசரப்பட்டால், ஏன் அவசரப்பட்டீர்கள் என்று கேள்வி வரும். செய்கிற பணிகளை முழுமையாக செய்து விட்டு தான் அத்திக்கடவு அவினாசி திட்டம் திறக்கப்படும், என்று கூறினார்.
0
0