‘அமைச்சர் வர்றார், எழுந்திருங்க.. எழுந்திருங்க’.. தரையில் அமர வைக்கப்பட்ட பெண்கள் ; அவசர அவசரமாக எழுப்பிய அதிகாரிகளால் பயனாளிகள் புலம்பல்!
Author: Babu Lakshmanan27 December 2022, 11:25 am
விருதுநகரில் அமைச்சரின் நிகழ்ச்சியில் பெண்களை தரையில் அமர வைத்த அதிகாரிகள், பின்னர் அமைச்சரின் வருகைக்காக மீண்டும் அவசர அவசரமாக எழுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.இராமச்சந்திரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரியும் அமைச்சர்களை வரவேற்பதற்காக டிஜிட்டல் பேனர்கள் மற்றும் கொடிகளை வழி நெடுகிலும் வைத்திருந்தனர்.
ஆனால் அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்கிக் கொள்வதற்காக மாவட்ட ஆட்சியரின் அலுவலக நுழைவு வாயிலில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பெயர் பலகையை மறைத்து டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். இதனால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் , என்ன செய்வது ஆளுங்கட்சி என்றால் மாவட்ட ஆட்சியர் பெயர் பலகையை கூட மறைத்து வைக்கலாம் போல என மன வேதனையுடன் பேசி சென்றனர்.
அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்குவதற்கு அமைச்சரின் கண்ணில் படும்படியாக இருக்க வேண்டுமாம். அதனால், டிஜிட்டல் பேனர் வைத்தார்களாம் என அவர்கள் கட்சியினரே சிலர் பேசிக்கொண்டது வியப்பிற்குறியது.
அது மட்டுமின்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கு பெற வந்த பெண்கள் அரங்கிற்கு வெளியில் தரையில் அமர்ந்து காத்துக் கொண்டிருந்தனர்.
பின்பு அமைச்சர் நிகழ்ச்சி முடிந்து அரங்கை விட்டுவெளியே வரும் போது, தரையில் அமர்ந்திருந்த பெண்களை, அமைச்சர் வருகிறார் அமர வேண்டாம் ” எழுந்திருங்கள், எழுந்திருங்கள் ” என அவசர அவசரமாக எழுந்திருக்க செய்த துறை அலுவலர்களின் செயல் மிகவும் வேதனைக்குரியதாக இருந்தது என அப்பெண்கள் புலம்பி சென்றனர்.
0
0