தேர்தலுக்குப் பிறகு எங்களுக்கு கண்ணே தெரியாது… கும்பிடு எல்லாம் தேர்தல் வரைக்கும் தான்… அமைச்சர் காந்தி பேச்சால் பதறும் திமுக!

Author: Babu Lakshmanan
3 January 2023, 4:52 pm

திமுக அமைச்சர்களில் சிலர் பொதுவெளியில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய விதமாக பேசுவதும், நடந்து கொள்வதும் பல நேரங்களில் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கும், தமிழக மக்களிடையே ஒரு பரபரப்பு பேசு பொருளாகவும் ஆகி விடுகிறது.

இதை அவர்கள் தெரிந்துதான் செய்கிறார்களா, அல்லது தெரியாமல் செய்கிறார்களா? என்பது கேள்விக்குறியான ஒன்று. என்றபோதிலும் எந்த பாகுபாடும் இன்றி சீனியர் அமைச்சர்கள் முதல் இளம் அமைச்சர்கள் வரை பலரும் இப்படி பேசி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியும் கொள்கின்றனர்.

ஓசி பயணம்

சில மாதங்களுக்கு முன்பு, அமைச்சர் பொன்முடி  அரசு டவுன் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களை ஓசி பயணம் என நக்கலாக கூறியது, அமைச்சர் கே என் நேரு, திருச்சியில் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்ற ஒரு போலீஸ் அதிகாரியை பாராட்டும்போது, “இவர் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் போதே எனக்கு பழக்கம்.

Ponmudi - Updatenews360

ஒருவரை வழக்கு போட்டு எப்படி உள்ளே தள்ளுவது என்பதும் இவருக்கு நன்றாக தெரியும். அதேபோல வழக்கிலிருந்து ஒருவரை விடுவிப்பதிலும் கை தேர்ந்தவர். இவர் நம்ம ஆள்” என குறிப்பிட்டது, அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தன்னிடம் மனு கொடுக்க வந்த பெண்ணை, அதே கோரிக்கை மனுவை கொண்டு அவருடைய தலையில் அடித்தது, அமைச்சர் ராஜகண்ணப்பன் பட்டியலினத்தை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவரை சாதி பெயரைக் கூறி திட்டியது என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.

கோபம்

இதனால் திமுக ஆட்சிக்கும், கட்சிக்கும் மக்களிடையே அவப் பெயர் ஏற்படுவதை எண்ணி வேதனையடைந்த முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில் மனம் நொந்தும் பேசினார். அதில் இனி யாரும் இப்படி பேசக்கூடாது என்ற மறைமுக எச்சரிக்கையும் இருந்தது.

அதன் பிறகு அமைச்சர்கள் இதுபோல சர்ச்சைக்குரிய விதமாக பேசுவதை நிறுத்திவிட்டாலும் கூட, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், இரண்டாம் நிலை தலைவர்களும் இப்படி பேசியதை நிறுத்தியதாக தெரியவில்லையே? என்று இன்றளவும்
பொதுவெளியில் ஒரு ஆதங்கம் உள்ளது.

இது உண்மைதான் என்று சொல்லும் விதமாக திமுக அமைச்சர்களில் ஒருவரான காந்தி கிருஷ்ணகிரியில் நடந்த அரசு விழா ஒன்றில் அரசியல்வாதிகள் பற்றி தன் மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசி, திமுகவுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

சர்ச்சை பேச்சு

விழாவில் அமைச்சர் காந்தி பேசியதாக கூறப்படுவது இதுதான்.

“நாங்கள் எல்லாம் அரசியல்வாதிகள். தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு பார்ப்பவர்களை எல்லாம் பார்த்து கையெடுத்து கும்பிடுவோம். தேர்தலுக்கு அப்புறம் எங்களுக்கு கண்ணே தெரியாது.

வேலூர் மாவட்டம், காட்பாடி தொகுதியில் அமைச்சர் துரைமுருகன் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்றபோது அங்கு நின்றிருந்த 200 பேரை பார்த்து கும்பிட்டு வாக்கு சேகரித்தார். ஒரே இடத்தில் 200 பேரின் ஓட்டுகளை வாங்கி விடலாம் என அமைச்சர் துரைமுருகன் நினைத்தார். அதனால் அவர்களிடம் நீங்கள் எந்த பகுதி? என அவர் கேட்டார்.

Minister MR Gandhi - Updatenews360

அதற்கு அந்த 200 பேரும் எங்கள் ஊர் ஆந்திர மாநிலம் சித்தூர் என்றும் ஒரு பணிநிமித்தமாக காட்பாடிக்கு வந்தோம் என்றும் தெரிவித்தனர். இவர்கள் கூறியதை கேட்டதும் அமைச்சர் துரைமுருகன் அப்படியே உடைந்து போய்விட்டார். பொதுவாக குழந்தைகள் அழும்போது சாக்லேட் கொடுப்பார்கள். அதே மாதிரிதான் மக்களுக்கு என்ன தேவையோ அதை அப்படியே செய்து விடுவோம்.

தூக்கத்தில் மனைவி கை வைத்தாலும் அவர்களையும் கும்பிடுவோம். ஆனால் வெற்றி பெற்றுவிட்டால் எங்களுக்கு கண்ணே தெரியாது. உங்களுக்கு யார் நல்லது செய்வார்கள் என மக்களாகிய நீங்கள்தான் யோசித்து ஓட்டு போட வேண்டும். அப்போதுதான் அரசியல்வாதிகளுக்கு பயம் வரும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரும்” என்று அதிரடியாக கூறி இருக்கிறார்.

கைத்தறி துறையை கவனித்து வரும் அமைச்சர் காந்தியின் இந்த பரபரப்பு பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையையும் ஏற்படுத்தி இருக்கிறது.

புலம்பல்

அமைச்சர் காந்தியின் பேச்சு திமுகவினரை மிகுந்த எரிச்சலுக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் இதுபோன்ற சர்ச்சைகளில் திமுக அமைச்சர்களில் பலர் சிக்கிக் கொண்டதால்தான் திமுக பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின்
தனது கோபத்தை கொட்டி தீர்த்தார்.

தமிழகத்தில் மழை பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள், மழை அதிகமாக பெய்தாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். ஒரு பக்கம் திமுக தலைவர், இன்னொரு பக்கம் தமிழகத்தின் முதலமைச்சர்; மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பதை போல உள்ளது என் நிலைமை! இத்தகைய சூழலில், என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ, மூத்தவர்களோ, அமைச்சர்களோ நடந்துகொண்டால் நான் என்ன செய்வது? யாரிடம் போய் சொல்வது? நாள்தோறும் காலையில், நம்மவர்கள் எந்த புது பிரச்னையும் உருவாக்கியிருக்க கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்; சில நேரங்களில் தூங்க விடாமல் ஆக்கிவிடுகிறது; என் உடம்பை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்! அமைச்சர்களின் அலட்சியமான பேச்சால் தூக்கத்தை தொலைக்கிறேன்.

நாம் பயன்படுத்த வேண்டிய சொற்கள் மிக மிக முக்கியமானவை, ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்; இதனால் அடுத்தவர்களிடம் பேசும்போது மிக மிக எச்சரிகையாக பேசுங்கள். பொதுமேடையில் மட்டுமல்லாது தனிப்பட்ட உரையாடல்களிலும் கவனமுடன் பேசவேண்டும்” என்று அப்போது ஸ்டாலின் ஒரே நேரத்தில் கடுமையான எச்சரிக்கை விடுத்து அறிவுரையும் கூறிருந்தார்.

முகம் சுளிப்பு

ஆனால் அதையெல்லாம் அமைச்சர் காந்தி மறந்துவிட்டாரோ, என்னவோ தெரியவில்லை. அல்லது எதார்த்தமாக பேசுகிறேன் என்று, தான் உள்ளிட்ட அரசியல்வாதிகளின் பொதுவான குணாதிசயம் பற்றிய உண்மைகளை போட்டு உடைத்து விட்டாரா என்பதும் புரியவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால், தான் பெரிதும் மதிக்கும் சீனியர் அமைச்சர் துரைமுருகன் பற்றியும் அவர் கிண்டலாக கூறியிருப்பதுதான். அவரை ஏன் இதில் கோர்த்து விட்டார் என்பதும் தெரியவில்லை. ஒருவேளை தனது அரசியல் ஆசான் என்பதால் உரிமையோடு அப்படி சொல்லி இருக்கலாம்.

ராணிப்பேட்டை தொகுதியில் துரைமுருகன் இரண்டு முறை வென்றும் இருக்கிறார். அவர் காட்பாடி தொகுதிக்கு மாறிய பின்பு ராணிப்பேட்டையில் காந்திதான் திமுக சார்பில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறார். அதில் நான்கு முறை வெற்றியும் பெற்றுள்ளார். அந்த நன்றி கடனுக்காக துரைமுருகன் மீதான மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக அவர் இப்படி பேசி இருக்கவும் வாய்ப்பு உண்டு.

பொதுவாக அரசியல்வாதிகள் என்றால் ஓட்டு போடும் வரைதான் தொகுதி பக்கம் வருவார்கள். பார்ப்பவர்களை எல்லாம் கையெடுத்து கும்பிடுவார்கள்.
தேர்தல் முடிந்து வெற்றி பெற்று விட்டால் அவ்வளவுதான் அந்த தொகுதி அவர்கள் கண்களுக்கு தெரியாது. எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள். தொகுதி மக்களை நினைத்தும் பார்க்க மாட்டார்கள் என்பது போன்ற டயலாக்குகள் சினிமாக்களில் நிறையவே வந்திருக்கின்றன.

அமைச்சர் காந்தி அதை அப்படியே பிரதிபலித்து தமிழக அரசியலில் ஒரு சூறாவளியையே ஏற்படுத்தி இருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் தனது அமைச்சரவை சகாக்கள் குறித்து புலம்பி தீர்த்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில், புத்தாண்டு தினத்தில் அமைச்சர் காந்தி, இப்படி பேசி இருப்பது, திமுகவினரை நிச்சயம் முகம் சுளிக்க வைத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எப்படி பார்த்தாலும் மாநிலத்தில் திமுக ஆளும் கட்சியாக உள்ள நிலையில் அமைச்சராக இருக்கும் அவர் இதுபோல் பேசியிருப்பது மிகப்பெரிய தவறு என்ற முணுமுணுப்பையும் திமுகவினரிடம் கேட்க முடிகிறது”என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 458

    0

    0