பெண் அமைச்சர்களுக்கு திமுகவில் மரியாதையே இல்லை… எப்பவும் அவங்களுக்குத்தான் : திராவிட மாடலை பொசுக்கிய அமைச்சர் கீதா ஜீவன்..!!
Author: Babu Lakshmanan22 August 2022, 2:09 pm
பெண் அமைச்சராக தான் இருந்தாலும், ஆண் அமைச்சர்கள் இருந்தால், அவர்கள் தன்னை விட இளையவராக இருந்தாலும், அவர்களுக்கே முதலில் மரியாதை அழைக்கப்படுவதாகக் கூறி அமைச்சர் கீதா ஜீவன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் மற்றும் அதிகாரமளித்தல் என்னும் தலைப்பில் கருத்தரங்க நடைபெற்றது. இதில், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, அவர் பேசியதாவது ; இந்தக் கருத்தரங்கில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைப்பு தற்போதைய சூழலில் மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்தியாவில் பெண்களுக்கான தளம் பல்வேறு துறைகளில் விரிவடைந்து வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் பெண்கள் மிகப்பெரிய பங்காற்றி வருகின்றனர்.
பெண்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கும் அளவிற்கான திட்டங்களை திட்டங்களை திமுக அரசு முன்னெடுத்து வருகிறது, எல்லா இடங்களிலும் ஆண்களுக்கு பெண் சமம் என்ற வகையில் அனைவருக்கும் சம வாய்ப்பு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார்.
எந்த இடத்திலும் பாலின வேறுபாடு இருக்கக்கூடாது என்பதற்காக முனைப்பில் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இது ஒருபுறம் இருக்கும் நிலையில் மறுபுறம் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக நடந்து வருகிறது. எனவே பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கான இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பெண் அமைச்சராக இருக்கும் நான், ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு சென்றால்கூட, அங்கு நான்கு ஆண் அமைச்சர்கள் இருந்தால், அவர்கள் என்னைவிட இளையவர்களாக இருந்தாலும், முதலில் அவர்களை அழைத்தே மரியாதை செய்கிறார்கள். இது இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது. முதலில் இந்த சமூகப் பார்வையும் மாற வேண்டும். இந்த மாற்றம் என்பது முதலில் வீடுகளில் இருந்து தொடங்க வேண்டும். பாலின வேறுபாடு இல்லாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும், என அவர் பேசினார்.
முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் பெண்களுக்கான அரசு, திமுக அரசு என்றெல்லாம் சொல்லி வரும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் பெண் அமைச்சர்களை காட்டிலும் ஆண் அமைச்சர்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறியிருப்பது, திராவிட மாடல் ஆட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.