டெண்டரில் முறைகேடா..? இதுக்காகத் தான் அண்ணாமலை அப்படி சொல்கிறார்.. அமைச்சர் மா.சுப்பிரமணியனின் புதிய குண்டு…!!
Author: Babu Lakshmanan14 June 2022, 5:09 pm
ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
உலக குருதி கொடையாளர் தினம் ஜூன் 14ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ABO என்ற ரத்த பிரிவை கண்டறிந்த Karl Landsteiner என்பவரின் பிறந்த நாளே உலக குருதி கொடையாளர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்வில் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்ரம்ணியன் குருதி தானம் அளித்தார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகமும் தானம் அளித்தார்.
அதன் பின் நடைபெற்ற நிகழ்வில் பேசிய பொது சுகாதார இயக்குநர் செல்வ விநாயகம், “அரசு ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வரும் அனைவருக்கும் ரத்த பிரிவு சோதனை செய்யப்படும். அதன் மூலம் குருதி கொடை செய்ய அவர்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும். 45கிலோ விற்கு மேல் உள்ள அனைவரும் ரத்த தானம் செய்யலாம். ஹீமோகுளோபின் அதிகம் உள்ள அனைவரும் ரத்த தானம் செய்ய வேண்டும்,” என தெரிவித்தார்.
சுகாதாரத்துறை செயலர் செந்தில் குமார் பேசுகையில், “கொரோனா காலத்தில் குருதி தானம் குறைந்திருக்கிறது. மீண்டும் குருதி கொடை 100 % வழங்க அனைத்து நடவடிக்கைகளும் எடுப்போம். மேலும், கிராமத்தில் மழை இல்லை என்பற்காக கிராம மக்கள் வேண்டுவதற்காக சென்றனர். மக்கள் அனைவரும் குடை இல்லாமல் சென்றனர். ஆனால் ஒரு குழந்தை மட்டும் குடையுடன் சென்றது. அந்த குழந்தையிடம் கேட்டதற்கு மழை வேண்டி பிரார்த்தனை செய்ய போகிறோம். அதனால் மழை வரும் என குழந்தை தெரிவித்தததாக குட்டி கதை கூறிய சுகாதாரத்துறை செயலர், இது போல சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ரத்த தானம் செய்து வந்துள்ளார் என சுகாதாரத்துறை செயலர் செந்தில்குமார் சுட்டிக்காட்டினார்.
இதைத் தொடர்ந்து, மருத்துவத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் பேசியதாவது :- கொரோனாவுக்கு முன்பு தமிழ்நாடு தான் குருதி கொடையாளர்கள் அதிகமாக கொண்ட மாநிலமாக இருந்தது. கொரோனா காலத்தில் குருதி தானம் குறைந்தது. நான் 60 முதல் 65 முறை குருதி கொடை அளித்திருக்கிறேன்.
ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 85 வயது ஜேம்ஸ் ஹாரிசன் என்பவர் 1174 முறை இது வரை தானம் அளித்து 2.5 மில்லியன் குழந்தைகள் உயிரை காப்பாற்றியுள்ளார். தமிழ்நாட்டில் ராஜசேகர் என்பவர் 195 முறை ரத்த தானம் அளித்துள்ளார். ஒரு யூனிட் ரத்தம் நான்கு பேருக்கு உதவும். ஆண்கள் ஒரு ஆண்டுக்கு நான்கு முறையும், பெண்கள் ஒரு ஆண்டுக்கு மூன்று முறையும் தானம் அளிக்கலாம். 97 அரசு மையங்கள், 270 தனியார் மையங்கள், 373 அரசு ரத்த சேமிப்பு வங்கிகள் , 139 தனியார் சேமிப்பு மையங்கள், 42 ரத்த பகுப்பாய்வு கூடங்கள் உள்ளன.
10 லட்சம் மதிப்பீட்டில் தொடர் தன்னார்வ ரத்த கொடையாளர் பட்டியலை கொண்ட பதிவேடு விரைவில் தயார் செய்யப்படும். இதுவரை 3,43,667 அலகுகள் ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமணியன் கூறியதாவது :- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கர்ப்பிணி பெண்களுக்கான ஊட்டச்சத்து மாவு குறித்து குற்றச்சாட்டு வைத்திருந்தார். ஊட்டச்சத்து பெட்டகம் டெண்டர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்கான டென்டர் திறக்கப்பட்டு L1 யார் என்று முடிவு செய்திருக்கிறார்கள். பாலாஜி சர்ஜிகல் என்ற நிறுவனம் L1 ஆக வந்துள்ளது.
அண்ணாமலை கூறிய அனிதா டெக்ஸ் கோட் என்ற நிறுவனம் L2வாக வந்துள்ளது. எனவே அந்த நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. அண்ணாமலை கூறிய நபருக்கு டெண்டர் வழங்கப்படவில்லை. விதிகளுக்கு உட்பட்டு, மற்றொரு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு கூறியதற்கு அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பெட்டகத்தின் விலை 2018 டெண்டரில் 1996.41 ஆகும். தற்போது 2180.71 ரூபாய் என்பது டெண்டரில் வந்த குறைந்தபட்ச விலையாகும். கடந்த முறை ஆவின் நெய், ரூ.191.41க்கு கொடுக்கப்பட்டது. தற்போது ரூ 219.50க்கு வழங்கப்படுகிறது. அதையும் கூட குறைத்து கேட்க முயல்வோம். ஆவின் விலை 12.6% சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்டகத்தின் ஒட்டுமொத்த விலை 9.6% அதிகரித்துள்ளது. கடந்த முறைக்கும் தற்போதும் 150 ரூபாய் வித்தியாசம் உள்ளது. எனினும் கூட அந்த நிறுவனத்தினிடம் பேசி விலை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு ஆண்டில் 11 லட்சம் பெட்டகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஐந்து பேர் டெண்டரில் பங்கேற்றுள்ளனர். ராமச்சந்திரன் என்ற ஒப்பந்ததாரருக்கு கிடைக்க வேண்டும் என்று தான் பாஜக அண்ணாமலை இதை செய்கிறார். அந்த நிறுவனம் technical bidல் தகுதியாகவில்லை.
திருவாரூரில் மருத்துவர் இல்லாமல் குழந்தை இறப்பு வருந்ததக்கது. மருத்துவர்கள் பணி நேரத்தில் வராமல் இருக்க கூடாது. உயிர் காக்கும் பணியில் இருக்கிறீகள். இது தொடர்ந்தால், மருத்துவர்கள் மீது பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு சினைமுட்டை விவகாரத்தில் அதிகபட்சமாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட முடியுமோ அது எடுக்கப்படும், என அமைச்சர் தெரிவித்தார்.
0
0