அதிகாரிகள் கூட்டத்தில் அமைச்சரின் மகனுக்கு என்ன வேலை? எதிர்க்கட்சிகள் கேள்வி : அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்!!
Author: Udayachandran RadhaKrishnan27 November 2022, 1:11 pm
அமைச்சர் மனோ தங்கராஜின் மகன், அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டிய நிலையில், அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ்.
அமைச்சர் மனோ தங்கராஜ் குழித்துறை அரசு மகளிர் கல்லூரி புதிய கட்டிட கட்டுமான பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் திமுக அரசு மதச்சார்புத் தன்மை மற்றும் நான்கு வழி சாலை திட்டங்களை பொறுத்தவரையில் முரண்பாடாக செயல்படுகிறது என கருத்து கூறியிருப்பதை பொறுத்தவரை திமுக மதச்சார்புத் தன்மையில் உறுதியாக செயல்படும். நான்கு வழி சாலை திட்டம் பரந்தூர் விமான நிலைய திட்டங்களை பொறுத்த வரையில் மக்களுக்கு எதிராக இந்த அரசு செயல்படாது. முதல்வர் அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பார்.” எனத் தெரிவித்தார்.
கூட்டுறவுத்துறை பற்றி நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மனோ தங்கராஜ், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியை நிதி அமைச்சர் விமர்சித்ததாக எடுத்து கொள்ளக் கூடாது. இது தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் சிறப்பாகச் செயல்படுகிறார். கடந்த 10 வருடங்களாக பல்வேறு துறைகளின் கட்டமைப்புகள் சிதைந்திருந்தது. அது சரி செய்யப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகள் கூட்டத்தில் எனது மகன் கலந்து கொண்டதாக பாஜக கூறுவதை பொறுத்தவரையில் அமைச்சர் என்ற முறையில் அனைத்து துறை அதிகாரிகளின் கூட்டங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தான் நடத்தி வருகிறேன். சுற்றுலா மாளிகையில் யாராவது ஆய்வு கூட்டத்தை நடத்துவார்களா? அன்று நடந்தது சுற்றுலா மாளிகையில் சில அதிகாரிகளுடான வெறும் கலந்துரையாடல் தான் எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பாஜகவினர் எந்தக் குற்றச்சாட்டை உண்மையாகச் சொல்கிறார்கள். எல்லாமே பொய் மூட்டை, புளுகு மூட்டைதான். அதை பற்றி பேச ஒன்றுமே இல்லை. பாஜகவினருக்கும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கும் என்னையோ திமுக அரசையோ விமர்சிக்க எதுவும் இல்லாததால் இதுபோன்ற பொய் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். பாஜகவினருக்கு வதந்திகளை பரப்பி வருவது தான் வேலை.
பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருந்தபோது எப்படி செயல்பட்டார் என்பது அவரது மனசாட்சிக்குத் தெரியும். நான் எப்படி செயல்படுகிறேன் என்பதும் அவர் மனசாட்சிக்கு தெரியும். நம் ஊரில் சொல்வார்கல், இருட்டைக் கொண்டு ஓட்டை அடைப்பது என.. அப்படி எந்த குறையும் இல்லாததால் இப்படி வதந்தி பரப்புகிறார்” எனத் தெரிவித்தார்.