விஸ்வரூபம் எடுக்கும் PTR-ன் ரூ.30 ஆயிரம் கோடி குறித்த ஆடியோ விவகாரம் : அமலாக்கத்துறையில் மேலும் ஒரு புகார் ; திமுகவுக்கு புது நெருக்கடி..!!
Author: Babu Lakshmanan16 June 2023, 8:59 am
அமைச்சர் பழனிவேல் தியாகராஜினின் ஆடியோ விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையில் மீண்டும் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் திமுகவுக்கு புது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும் ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியது. அந்த ஆடியோவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் ஒரே வருடத்தில் ரூ.30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டதாகவும், அமலாக்கத்துறையிடம் இருந்து தப்பிக்க இருவரும் முயற்சித்து வருவதாகவும் கூறியிருந்தார்.
அவரது இந்த ஆடியோ வெளியான நிலையில் திமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் அடுக்கடுக்கான கேள்விகளையும், பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர். இதையடுத்து, பழனிவேல் தியாகராஜனிடம் இருந்த நிதித்துறையை பறித்து விட்டு, தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் மத்திய புலனாய்வுத்துறைக்கு அதிமுக வழக்கறிஞர் பாபு முருகவேல் புகார் அளித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய நிதித்துறை அமைச்சர் மற்றும் தமிழக முதலமைச்சருக்கும் புகார் மனு அனுப்பினார்.
இந்நிலையில், வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு வழக்கறிஞர் பாபு முருகவேல் மீண்டும் புகார் அளித்துள்ளார். ஆடியோவில் பதிவான குரல் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுடையது இல்லை எனும் பட்சத்தில், அதுபோன்ற குரல் பதிவை பதிவு செய்து குற்றம் சுமத்தியிருப்பது யார் என்பதை கண்டறிந்து, உரிய நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.