‘தியாகராஜன் என் தாத்தா’… அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய் ; அமைச்சர் பி.டி.ஆர் ஆவேசம்…!!
Author: Babu Lakshmanan22 September 2023, 6:08 pm
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய் கூறி வருவதாகவும், அவருக்கு நேரத்தை வீணடிக்கக் கூடாது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னாள் முதலமைச்சர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதாவது, மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை மாகாண முதலமைச்சரும், திமுகவைச் சேர்ந்தவருமான தியாகராஜன் முன்னிலையில் இந்து மதம் குறித்து அண்ணா பேசியதாகவும், இதனை முத்துராமலிங்கத் தேவர் கண்டித்ததாகவும் கூறியிருந்தார்.
அண்ணாமலையின் இந்தக் கருத்திற்கு அதிமுக, திமுக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணாமலையின் கருத்துக்கு அமைச்சரும், தியாகராஜனின் பேரனுமான பழனிவேல் தியாகராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது:- எனது தாத்தா தியாகராஜன் சென்னை மாகாண முதலமைச்சர், அறிஞர் அண்ணா தமிழ்நாட்டின் முதலமைச்சர், பசும்பொன் முத்துராமலிங்கனார் சிறந்த இயக்கவாதி. இவர்களுக்குள் இருந்த நல்ல உறவை, அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறக்காத அண்ணாமலை போன்றோர் எங்கோ படித்ததாக சொல்லும் அவதூறு கருத்துக்களை பொய் என நிரூபிக்க பலர் உண்மையை எடுத்து சொல்லி வருகின்றனர்.
அண்ணாமலை போன்ற பொய் சொல்லுபவர்களுக்கு பதில் அளித்து நேரத்தை வீணடிக்க கூடாது. அண்ணாமலை போன்றவர்களின் பொய்யான கருத்து ஜனநாயத்திற்கே கேடு, எனக் கூறினார்.