‘எனக்கா ஓட்டு போட்ட’… மருத்துவமனை குறித்து கோரிக்கை வைத்த மக்களிடம் அலட்சியம்… மீண்டும் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி..!!
Author: Babu Lakshmanan17 May 2023, 12:10 pm
விழுப்புரம் ; கள்ளச்சாராய விவகாரம் காசோலை வழங்கச் சென்றபோது அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 13 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த 12 குடும்பங்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேரில் சென்று காசோலைகளை வழங்கினர்.
அப்போது, உயிரிழந்த சங்கர் என்பவரது வீட்டிற்கு சென்று காசாலை வழங்கிய போது, அருகில் இருந்த மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி மற்றும் அமைச்சர் மஸ்தான் ஆகியோர் காசோலையை வழங்குங்கள் என கூறியதற்கு, “யோ பேசிட்டு தானே இருக்கேன்,” என்று ஒருமையில் பேசியது அங்கிருந்தவர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதேபோன்று, மரக்காணம் செல்லன் தெருவில் உயிரிழந்த ஆபிரகாம் வீட்டிற்கு சென்று காசோலையை வழங்கிவிட்டு திரும்பிய போது, பொதுமக்கள் முற்றுகையிட்டு மரக்காணம் பகுதியில் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தாததால் தான் இங்கு பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அவசர சிகிச்சை என்றாலும் 40 முதல் 50 கிலோமீட்டர் தாண்டி தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளதாகக் கூறினர்.
எனவே அரசு மருத்துவமனை வேண்டும் என கேட்டதற்கு, ‘நீங்கள் என்ன எனக்கா ஓட்டா போட்டீர்கள்,’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இதுவும் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.