“எவ இவ… சொல்றத முதல்ல கேளு”… அமைச்சர் பொன்முடி மீண்டும் சர்ச்சை பேச்சு ; கிராம சபை கூட்டத்தில் திடீர் ஆவேசம்..!!

Author: Babu Lakshmanan
1 May 2023, 3:37 pm

விழுப்புரம் அருகே கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி மக்களிடையே ஆவேசமடைந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மே தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் நடைபெற்றது. அதன் ஒருபகுதியாக கானை ஒன்றியத்திற்கு உட்பட்ட கெடார் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ புகழேந்தி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

கெடார் ஊராட்சி மன்ற தலைவர் இந்திராமணி வரவு செலவு கணக்குகளை பொதுமக்கள் மத்தியில் வாசித்த பிறகு பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, கெடார் ஊராட்சிக்கு உயர்நிலை பள்ளிக்கூடம், காவல் நிலையம், தொடக்க கூட்டுறவு வேளாண் சங்கம் உள்ளிட்டவைகளை கொண்டு வந்தது திமுக அரசு என பேசினார். தொடர்ந்து இந்த உயர்நிலையில் படித்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் முதலமைச்சர் வழங்குவதாக தெரிவித்தார்.

அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் தனது மகளுக்கு ஆயிரம் ரூபாய் வரவில்லை என கூறினார். அதற்கு எந்த கல்லூரியில் படிக்கிறார் என அமைச்சர் கேட்க, அவர் தனியார் கல்லூரியில் பயில்வதாக அந்தப் பெண் குறிப்பிட்டார்
உடனடியாக தனியார் கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு பணம் கிடையாது என அமைச்சர் கூறியதை கேட்டு கூட்டத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அருகில் இருந்த அதிகாரிகள் கூறியதை அடுத்து சுதாரித்துக் கொண்ட அமைச்சர் தனியார் கல்லூரியில் பயில்பவர்களுக்கு உண்டு என கூறினார். பின்னர் மனுவாக எழுதிக் கொடுக்கவும் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து, செல்லங்குப்பம் பகுதியில் 13 வருடங்களாக சாலை மற்றும் குடிநீர் வசதி இல்லை என தொடர்ந்து பொதுமக்கள் கேள்வி எழுப்பவே, ஆவேசமடைந்த அமைச்சர் “எவ இவ” “சொல்றத முதல்ல கேளு” என ஆவேசமடைந்த நிலையில் கூறினார். இதனால் கிராம சபை கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்