‘யோவ் வை-யா அதைய… அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி.. பத்திரிக்கையாளர்களிடம் டென்ஷன் ஆன அமைச்சர் பொன்முடி…!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 5:54 pm

அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களிடம் அமைச்சர் பொன்முடி டென்ஷன் ஆக பதிலளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கல்லூரி அளவில் , பல்கலைக்கழக அளவில், மாநில அளவில் போட்டிகள் நடத்தி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். கல்லூரிகளில் ஒரே மாதிரி பாடத்திட்டம் குறித்து ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

இந்த ஆண்டில் கலை அறிவியல் கல்லூரிகள் அனைத்திலும் தமிழ், ஆங்கிலம் பாடங்கள் 100 ஒரே மாதிரி இருக்கும். மற்ற பாடங்களில் 75 ஓரே மாதிரி‌ பாடத்திட்டம் இருக்கும். இதன் மூலம் ஒரு கல்லூரியில் படித்த மாணவர் வேறு கல்லூரிக்கு செல்லும் பொழுதும், ஒரு பல்கலைக்கழகத்தில் கீழ் பணியாற்றும் பேராசிரியர் வேறு பல்கலைக்கழகத்துக்கு மாறும் போதும் பாதிக்கப்படாமல் இருக்கும்.‌

இந்த கல்வி ஆண்டில் 90 சதவீத படிப்புகளில் அனைத்து கலை அறிவியல் பாடங்களில் அனைத்தும் ஒரே மாதிரியாக பாடத்திட்டம் இருக்கிறது. புதிய படிப்புகளுக்கு அடுத்த கல்வி ஆண்டில் அதுவும் ஒரே மாதிரியாக கொண்டு வரப்படும்.
இந்த ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் தரத்தை தேசிய அளவில் உலக அளவில் உயர்த்தப்படும். அதற்காக ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பொறுப்புகள் நிரப்பப்படும். இதற்காக குழு அமைத்து தேர்வு செய்யப்படுவார்கள். தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது முடிந்த பிறகு நிரப்பப்படும்.

கௌரவ விரிவுரையாளர் ஊதியம் ரூ.5 ஆயிரம் கூடுதலாக வழங்கப்படும். தற்போது ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது இனிமேல் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும். அரசு கல்லூரிகளில் பணியாற்றும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் கிடைக்கும். வளர்ச்சி ஏற்ப மாற்றம் வேண்டும் என்பதற்காக தான் கல்லூரிகளில் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது. தேசிய கல்வி கொள்கையில் நல்லது இருந்தால் கூட அதனை எடுத்துக்கொள்வோம். ஆனால் மாநிலத்துக்கு என்று பாடத்திட்டம் வேண்டும். அது நமக்கு ஏற்ப இருக்கும்.

ஸ்லெட் தேர்வு நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது சில ஆண்டுகளாக ஸ்லெட் தேர்வு நடத்தப்படாமல் உள்ளது. இந்த ஆண்டு ஸ்லெட் தேர்வு நடத்தப்படும். இனிமேல் ஆண்டுதோறும் ஸ்லெட் தேர்வு முறையாக நடத்தப்படும்.
கல்லூரிகளில் வெவ்வேறு மாதங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாற்றம் செய்யப்படும். இனிமேல் அனைத்து கல்லூரிகளில் ஒரே காலகட்டத்தில் தேர்வுகள் நடத்தப்படும்‌‌, எனக் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமலாக்கத்துறை சோதனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால், கடுப்பான அமைச்சர் பொன்முடி, கல்வியை பற்றி மட்டும் கேளுங்கள் எனக் கூறினார். ஆனால், தொடர்ந்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதால், ஆத்திரமடைந்த அவர், யோவ், அதைய வை-யா.. எனக் கூறியதுடன்,
அமலாக்கத்துறை விவகாரத்தை சட்டரீதியாக சந்திக்க வேண்டிய இடத்தில் சந்திப்போம். இது எல்லாம் நாங்கள் பார்க்காதது கிடையாது. முதல்வரே சொல்லிவிட்டார்‌. சட்ட ரீதியாக சந்திப்போம், எனக் கூறினார். இதனால், செய்தியாளர்கள் சந்திப்பில் சலசலப்பு ஏற்பட்டது.

  • Irunga Bai dialogue trending சோசியல் மீடியாவை அலறவிட்ட”இருங்க பாய்”…குரலுக்கு சொந்தக்காரர் இவர் தானா…!