மனைவியுடன் நீதிமன்றம் வந்தார் அமைச்சர் பொன்முடி… தண்டனை விபரம் சற்று நேரத்தில் வெளியீடு ; நீதிமன்றத்தை சுற்றி போலீசார் குவிப்பு

Author: Babu Lakshmanan
21 December 2023, 10:25 am

சொத்து குவிப்பு வழக்கு இன்று தண்டனை விபரங்கள் வெளியாக உள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி தனது மனைவியுடன் நீதிமன்றம் வந்தார்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை, 2002ல் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டாலும், முறையான விசாரணை நடைபெறவில்லை எனக் கூறி, சென்னை உயர்நீதிமன்றம் தானாக இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது. பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு, அமைச்சர் பொன்முடியை விடுலை செய்தது செல்லாது என்றும், அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

அமைச்சர் பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்து சேர்த்தது நிரூபணமாகியுள்ளதாகவும், அவருக்கான தண்டனை விபரங்களை டிசம்பர் 21ம் தேதி காலை 10.30 மணிக்கு வெளியிடுவதாகவும், அன்றைய தினம் அமைச்சர் பொன்முடி, அவரது விசாலாட்சி நேரில் அல்லது காணொலி வாயிலாக ஆஜராக நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இன்று அமைச்சர் பொன்முடிக்கான தண்டனை விபரங்கள் வெளியாக உள்ளது.

இதையொட்டி, தேசியக்கொடி அகற்றப்பட்ட காரில் அமைச்சர் பொன்முடி தனது மனைவி விசாலாட்சியுடன் சென்னை உயர்நீதிமன்றம் வந்தார். தீர்ப்பு வழங்கப்பட உள்ள அறை எண் 46ல் இருவரும் காத்திருக்கின்றனர். அவருடன் மகன் கவுதம் சிகாமணி மட்டும் உடனிருக்கிறார்.

அமைச்சருக்கு எதிரான வழக்கில் இன்று தண்டனை விபரம் வெளியிட இருப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ