வைப்புத்தொகை ரூ.42 கோடியா…? திமுகவை திகைக்க வைத்த பொன்முடி..! தகர்ந்து போன பிரதமர் வேட்பாளர் கனவு…!!

Author: Babu Lakshmanan
19 July 2023, 6:11 pm

அமலாக்கத் துறையின் அதிரடி வலையில் சிக்கியுள்ள அமைச்சர் பொன் முடியும், அவருடைய மகன் கௌதம சிகாமணி எம்பியும் எளிதில் தப்புவதற்கான வாய்ப்புகளே இல்லை என்று கூறும் அளவிற்கு, அவர்களது நிலைமை அமைச்சர் செந்தில் பாலாஜியை விட தற்போது படுமோசமாகி உள்ளது.

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகள் மாநாட்டிற்கு புறப்படும் முன்பாக இந்த சோதனை குறித்து திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலின், “2024 தேர்தல் தோல்வி பயத்தால் பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்ப மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. அதன் விளைவுதான் அமலாக்கத்துறையின் இந்த
திடீர் சோதனை. இதைக் கண்டு திமுக பயப்படாது” என்று ஆவேசமாக கூறியிருந்தார்.

என்றாலும் கூட சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய ரெய்டின் முடிவில் அமலாக்கத்துறை வெளியிட்ட தகவல் திமுகவிற்கு மட்டும் அல்ல தேசிய அளவில் அக்கட்சியுடன் ஒன்று சேர்ந்துள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி ராஷ்ட்ரிய ஜனாதளம், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கும் பலத்த ‘ஷாக்’ கொடுத்ததுபோல் ஆகிவிட்டது.

ஏனென்றால் அமலாக்கத்துறை வெளியிட்ட அந்த அறிக்கையில் பொன்முடியும், கௌதம சிகாமணியும் எவ்வாறெல்லாம் சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது வெளிச்சம் போட்டு காட்டப்பட்டு இருக்கிறது.

அந்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இவைதான்.

“2006 முதல் 2011 வரை பொன்முடி கனிம வளத்துறை அமைச்சராக பதவி வகித்த கால கட்டத்தில் செம்மண் குவாரி உரிமம் அவருடைய மகன் உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் வழங்கியது தெரிய வந்துள்ளது. சட்டவிரோத குவாரி மூலம் கிடைக்கப்பெற்ற பல லட்ச ரூபாய் பணம் பல்வேறு பரிவர்த்தனைகள் மூலம் பினாமிகளின் பெயரிலான வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டும் இருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள இரண்டு நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளுக்கு முறைகேடாக அனுப்பப்பட்ட பணம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தோனேசிய நிறுவனம் 41 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு 2022-ம் ஆண்டு 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வெளிநாட்டு முதலீடுகள் நடைபெற்ற சமயத்தில் அதிக மதிப்பிலான ஹவாலா பணமாக மாற்றப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பொன்முடி வீட்டில் நடந்த சோதனையில், கணக்கில் வராத 81 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி பொன்முடியின் வீட்டில் முறையான விளக்கம் அளிக்கப்படாத 13 லட்ச ரூபாய் மதிப்பிலான இங்கிலாந்து பவுண்டு பணம் பறிமுதல் செய்யப்பபட்டு உள்ளது. விசாரணையை திசை திருப்பும் விதமாக பறிமுதல் செய்யப்பட்ட பணம் அனைத்தும் அவர்களுக்கு சொந்தமான மருத்துவமனை மூலம் கிடைக்கப்பெற்றது போன்று போலியான கணக்கு மற்றும் ஆவணங்களை தயாரித்து இருப்பது அமலாக்கத் துறையால் கண்டறியப்பட்டு தடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த முறைகேடான கணக்கு விவரங்கள் அனைத்தும் வழக்கில் தொடர்புடைய ஒருவரின் மூலம் பெறப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் கணக்கு விவரங்களுக்கு அவர்கள் சொல்லும் காரணம் நம்பும்படியாக இல்லை. சொத்துகள், நிறுவனங்கள் வாங்கியது, பிற நிறுவனங்களில் முதலீடு செய்தது போன்றவை சட்டவிரோத நடவடிக்கை மூலம் நடைபெற்று இருப்பது அமலாக்கத் துறையின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இந்த வழக்கு தொடர்பாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.மேலும் இந்த குற்றச்செயலில் நேரடியாக தொடர்புடைய 41 கோடியே 90 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்புத் தொகை சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டு உள்ளது” என்று அமலாக்கத்துறை வெளியிட்ட அந்த தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இப்படி பொன்முடி அவருடைய மகன் கௌதம சிகாமணி மற்றும் அவருடைய பினாமிகள் இந்த மெகா மோசடியில் ஈடுபட்டிருப்பது தேசிய அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுதவிர ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் சுமார் 7 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இவர்கள் தொழில் முதலீடு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் அமலாக்கத்துறை தீவிர விசாரணையில் இறங்கி உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அமலாக்கத்துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவலின்படி 42 கோடி ரூபாயை வங்கிகளில் நிரந்தர வைப்புத் தொகையாக பொன் முடியும் அவருடைய மகன் கௌதம சிகாமணியும் டெபாசிட் செய்திருப்பது திமுகவினரே பரபரப்பாக பேசும் விஷயமாக மாறி இருக்கிறது.

“அமலாக்கத்துறை சட்டபூர்வமாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தவறானவை, ஆதாரமற்றவை என்பதை இனி நிரூபிக்க வேண்டிய இக்கட்டான நிலைமை அமைச்சர் பொன்முடிக்கும், அவருடைய மகன் கௌதம சிகாமணி எம்பிக்கும் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் அமலாக்கத்துறையினரிடம் இருவர் தொடர்பாகவும் 900க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் சிக்கியுள்ளன என்கிறார்கள். அவை அனைத்துக்கும் தகுந்த ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவிக்கவேண்டிய நிலைமை உண்டாகும். எனவே இதில் தப்புவது மிக மிகக் கடினமான ஒன்றாகவே இருக்கும்.

அதேநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இருவரையும் தனித்தனியாக விசாரித்திருப்பதும் அவர்களிடம் ஆம், இல்லை என்று பதிலளிக்கும் விதமாக 100 கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுவதும் தந்தைக்கும் மகனுக்கும் ஏற்பட்டுள்ள இன்னொரு இடியாப்ப சிக்கலாகும். ஏனென்றால் இருவரும் ஒரே மாதிரியாக ஆம், இல்லை என்று பதில் அளித்து இருப்பார்களா? என்பது சந்தேகம்தான். அதற்கான வாய்ப்புகளும் மிக மிக குறைவு.

என்னதான் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து அமலாக்க துறையினரின் கேள்விகளை சந்திக்க தயாரானாலும் கூட விசாரணையின்போது கிடுக்குப்பிடி கேள்விகள் எழுந்தால் தடுமாற்றம் ஏற்படவே செய்யும்.

அதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பி இருவரிடமும் விசாரணை நடத்தும்போது சரியான ஆதாரங்களை காண்பிக்க தவறினால் தந்தையும் மகனும் கைது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்படலாம்.

அதேநேரம் அமைச்சர் பொன்முடிக்கு இன்னொரு சிக்கலும் எழுந்துள்ளது. வெளிநாட்டு கரன்சிகளை ஒருவர் பல லட்ச ரூபாய் கணக்கில் வீட்டில் பதுக்கி வைத்திருக்க முடியாது. ஏனென்றால் அதை ஹவாலா மோசடிக்கு பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் பொன்முடியோ 13 லட்ச ரூபாய் அளவிற்கு இங்கிலாந்து நாட்டின் பவுண்டுகளை வீட்டில் பதுக்கி வைத்திருக்கிறார். இது முற்றிலும் சட்டவிரோதம் என்பதால் தண்டனைக்குரிய குற்றங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதற்கு அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இதிலிருந்து பொன்முடி விடுபட முடியுமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான்!

இந்த நிலையில்தான் ஜூலை 19ம் தேதியான இன்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பாக கௌதம சிகாமணி ஆஜராகி, வெளிநாடுகளில் செய்துள்ள தொழில் முதலீடுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“திமுகவும் தற்போது புதிய கூட்டணி கண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களும் பொன்முடி அவருடைய மகன் கௌதம சிகாமணி இருவர் மீதும் அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கை அரசியல் ரீதியாக பழி வாங்கும் செயல் என்று கூறுவது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக 2.65 லட்சம் லோடு லாரி செம்மண் அள்ளியதாகவும், இதனால் அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தும் வருகிறது.

இந்த நிலையில் சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து கடந்த ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்துள்ளதாக அமலாக்க துறைக்கு நம்பத் தகுந்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்தே சென்னையிலும், விழுப்புரத்திலும் அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் 2008ம் ஆண்டு ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் இந்தோனேசியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் முதலீடு செய்து அதன் மூலம் 7.6 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளார் என்று கௌதம சிகாமணி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

அதேபோல்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 40க்கும் மேற்பட்டோரிடம் ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட வழக்கையும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில்தான் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. ஆனால் திமுகவும்,
அதன் கூட்டணி கட்சிகளும் அமலாக்கத்துறை பாஜக அரசின் பேச்சைக் கேட்டு நடப்பதுபோல குற்றம் சாட்டுவது சரியானது அல்ல.

போகப் போக அமலாக்கத்துறை இன்னும் பல கொடுமைகளை அரங்கேற்றும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதை பார்க்கும்போது இன்னும் சில அமைச்சர்கள் அதிரடி சோதனையில் மாட்டிக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதேநேரம்,பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் தங்களுக்கு பிரதமர் பதவியின் மீது நாட்டமில்லை என்பதை காங்கிரஸ்
வெளிப்படையாக தெரிவித்து விட்டது. இதனால் தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சி, நாட்டுக்கே சிறந்த வழிகாட்டி என்று தொடர்ந்து பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில்தான் திமுக அமைச்சர்களில் இருவர் அமலாக்கத் துறையின் விசாரணை வளையத்திற்குள் சிக்கிக்கொண்டது வட மாநில எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருக்கு நெருடலை ஏற்படுத்தியது. அதனால் கடைசி நேரத்தில் அவர்கள் தங்களது எண்ணத்தை மாற்றிக்கொண்டு விட்டதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே திமுகவின் ஆட்சி குறித்து தமிழக மக்களிடம் அதிருப்தி நிலவி வரும் சூழலில் இது திமுகவுக்கு தேசிய அளவில் நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தி இருப்பதையே காட்டுகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

  • 150 நடிகைகளுடன் தனுஷ்… சரமாரியாக தாக்கும் சுசித்ரா..!
  • Views: - 354

    0

    0