‘நான் எப்பவுமே இரட்டை இலை தான்’… கேள்வி கேட்ட அமைச்சர் பொன்முடிக்கு ஷாக் கொடுத்த மூதாட்டி…!!
Author: Babu Lakshmanan27 July 2023, 8:53 pm
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கட்சிப் பாகுபாடின்றி, சாதிய வேறுபாடின்றி தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றும் முகாம், விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து, விழுப்புரம் புதிய நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்று வரும் இம்முகாமை, உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் க.பொன்முடி, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்றும் பணி, கடந்த 3 நாள்களாக நடைபெற்று வருகிறது. கட்சிப் பாகுபாடின்றி, சாதிய வேறுபாடின்றி, தகுதி வாய்ந்த அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 2 கோடியே 65 லட்சம் குடும்ப அட்டைதாரர்களில் ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் குறிப்பாக, விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 லட்சத்து 18 ஆயிரத்து 354 குடும்ப அட்டைதாரர்களில், ஏறத்தாழ 2 லட்சம் பேருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
முன்னதாக, உரிமைத்தொகை வழங்கும் முகாமினை பார்வையிட வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முத்தம்பாளையம் பகுதியில் இருந்து வந்த பெண்மணியிடம் நீ எந்த கட்சியை சேர்ந்தவர் என கேள்வி கேட்டார். அதற்கு அந்தப் பெண், ‘நான் இரட்டை இலை கட்சியை சேர்ந்தவர்’ என கூறியவுடன், சிரித்துக் கொண்ட அமைச்சர் பொன்முடி கட்சி பாகுபாடு இன்றி அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்குகின்ற அரசு திராவிட மாடல் திமுக அரசு தான் என பெருமை பேசினார்.