CM ஸ்டாலின் பேச்சின் போது மேடையில் சிரித்தது ஏன்..? கேள்வி கேட்ட நிரூபர்கள்… கோபத்துடன் புறப்பட்ட அமைச்சர் பொன்முடி..!!
Author: Babu Lakshmanan12 October 2022, 3:46 pm
சில அமைச்சர்களின் செயல்பட்டால் தூக்கமிழந்துள்ளதாக முதலமைச்சர் பேசியபோது சிரித்துக்கொண்டிருந்தது ஏன்…? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல மறுத்து கையில் சைகைகாட்டி அமைச்சர் பொன்முடி கோபத்துடன் புறப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் கல்லூரியில் பி எட் கலந்தாய்வை அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூயிதாவது :- கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக 4,000 விரிவுரையாளர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு நியமிக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள், நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்படும் வரை பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்த அமைச்சர் பொன்முடி, ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் விரிவுரையாளர் தேர்வில் வெற்றி பெறும் நபர்களுக்கு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றிய ஆண்டுகளின் அடிப்படையில் நேர்முகத்தேர்வில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை மதிப்பெண் வழங்கப்படும் என்றும் கூறினார்.
தற்போது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளராக பணியில் உள்ள 5600 நபர்களில் 2000த்திற்கும் மேற்பட்டவர்கள் விரிவுரையாளர்களுக்கான தகுதி இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார். இவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்று கூறிய அமைச்சர் பொன்முடி, 4 ஆயிரம் நிரந்தர விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டாலும் எஞ்சியிருக்கும் 1875 காலி விரிவுரையாளர் இடங்களில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவித்தார்.