அமைச்சர் பொன்முடி வழக்கு.. வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை : உயர்நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2023, 5:58 pm

அமைச்சர் பொன்முடி வழக்கு.. வேறு நீதிபதிக்கு மாற்ற கோரிக்கை : உயர்நீதிமன்றம் போட்ட பரபரப்பு உத்தரவு!!

கடந்த 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக ஒரு கோடியே 36 லட்சத்திற்கு சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி மீது லஞ்ச ஒழிப்புத் துறை, 2002ல் வழக்குப்பதிவு செய்தது.

விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்கு, வேலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும், போதிய ஆதாரங்கள் இல்லை எனவும் கூறி, பொன்முடியையும், அவரது மனைவியையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் இதுவரை மேல்முறையீடு செய்யாத நிலையில், குற்ற விசாரணை முறைச் சட்டம் 397வது பிரிவின்படி, விசாரணை நீதிமன்றங்களின் முடிவுகள் சரியா என்பதை ஆய்வு செய்ய வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தானாக முன்வந்து மறு ஆய்வு மனுவை விசாரணைக்கு எடுத்தார்.

தான் பார்த்ததிலேயே மோசமான முறையில் விசாரணை நடத்தப்பட்ட வழக்கு என்பதாலேயே, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை ஏன் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன் என்பது குறித்து 17 பக்க உத்தரவை பிறப்பித்துள்ளேன்.

இதுவரை நான் பார்த்ததில், மிக மோசமான முறையில் விசாரிக்கப்பட்டதால்தான் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளேன்.

எனவே, இந்த மனு தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத் துறை, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடுகிறேன்” என்று வழக்கின் விசாரணையை செப்டம்பர் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், குற்ற விசாரணை நடைமுறையை திரிக்கும்வகையில் சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாகவும், வேலூருக்கு மாற்றியது, தீர்ப்பு உள்ளிட்டவை சட்டவிரோதமானது என்பதால், சட்டத்தின் பார்வையில் செல்லாது என்பதால், நீதித்துறையை மதிப்பிழக்கச் செய்யும் முயற்சி நடந்திருப்பதால், இந்த விவகாரத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாக விளக்கம் அளித்து இருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா ஆஜராகி, இந்த வழக்கை தாமாக விசாரணைக்கு எடுக்க இந்த நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும், நிர்வாக ரீதியாக நோட்டீஸ் கொடுத்திருக்க வேண்டும், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து ஏன் எடுக்கப்படுகிறது என்பது தொடர்பாக நீங்கள் அளித்த தீர்ப்பு இந்த விவகாரத்தில் நீங்கள் முன் கூட்டியே தீர்மானித்தது போன்று உள்ளது என்று சுட்டிகாட்டினார்.

குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 401 உட்பிரிவு 2 ன் படி குற்றம்சாட்டப்பட்டவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார். அமைச்சர் பொன்முடி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ ஆஜராகி, வழக்கு தொடர்பாக எந்த ஆவணங்களும் தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் விழுப்புரத்திலிருந்து வேலுருக்கு நிர்வாக உத்தரவின் மூலமா மாற்றப்பட்டுள்ளதால் அதற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தார்.

அந்த ஆவணங்களும் வழங்கப்பட வேண்டும் கேட்டுக்கொண்டார். மேலும் தங்களுடைய உத்தரவு ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது போல் உள்ளது என்றும் சுட்டி காட்டினார். இந்த வழக்கில் இருந்து நீங்கள் விலக வேண்டுமென கூறவில்லை.

அதே நேரத்தில் சட்டப்படி தலைமை நீதிபதி அல்லது உரிய அமர்வு முன்பு வைத்து தான் யார் விசாரிப்பது என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்த வாதங்களை கேட்ட நீதிபதி, அமைச்சர் பொன்முடி தொடர்பான வழக்கினை தானே விசாரிக்கிறேனா என்பது குறித்து அடுத்த வாரம் முடிவு செய்யப்படும் என்று குறிப்பிட்டு வழக்கின் விசாரணையை வரும் 14 ம் தேதி ஒத்திவைத்தார்.

  • seeman told that the scenes which are indicating mullaiperiyar dam issue கலவரத்தை தூண்டும் எம்புரான், இது திட்டமிட்ட சதி- பொங்கி எழுந்த சீமான்