அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரம் ; பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவி உள்பட 3 பெண்கள் கைது!

Author: Babu Lakshmanan
16 August 2022, 3:44 pm

மதுரை : மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் வாகனத்தின் மீது காலணி எறிந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் பாஜக மகளிர் அணி மாவட்ட தலைவி உள்பட 3 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.

நேற்று முன்தினம் (13.08.22) மதுரை விமான நிலையத்தில் மறைந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி செலுத்த வந்த நிதி அமைச்சர் வாகனத்தில் பாஜகவினர் காலணியை வீசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மதுரை அவனியாபுரம் காவல் துறையினர், நேற்று முன்தினம் பாஜக மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் குமார் என்ற மார்க்கெட் குமார் (48), மாவட்ட பிரச்சார பிரிவு செயலாளர் பாலா (49), திருச்சியை சேர்ந்த கோபிநாத் (42), ஜெய கிருஷ்ணா (39), கோபிநாத் (44), முகமது யாகூப் (42) முன்னாள் மண்டல தலைவர் ஜெயபால் உள்பட ஏழு பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து, மொத்தம் 31 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, 7 பேர் கைதான நிலையில் நேற்று நள்ளிரவில் தல்லாகுளம் காவல் உதவி ஆணையர் சுரேஸ்குமார் தலைமையில் போலீஸார், கருமாத்தூர் அருகே வாகைகுளம் பகுதியில் பதுங்கி இருந்த மாவட்ட மகளிர் அணி தலைவி தனலெஷ்மி, மாவட்ட மகளிர் செயலாளர் சரண்யா மற்றும் தெய்வானை உள்பட 3 பேரை கைது செய்தனர்.

தனலெஷ்மி, சரண்யா, தெய்வானை உள்பட 3 பேரும் விசாரணைக்காக அவனியாபுரம் காவல் நிலையத்தில் உள்ள இவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

ஏற்கனவே, ஏழு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்று பேரையும் சேர்த்து மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், மண்டல தலைவர் ஜெயபால் நிபந்தனை ஜாமினில் வெளியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 577

    0

    0