அமைச்சர் பி.டி.ஆர் அரசியலுக்கு முழுக்கா?… பரபரக்கும் அரசியல் களம்!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 8:10 pm

நிதி அமைச்சர் பதவியில் இருந்த போது பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானதில் இருந்தே தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது.

அதில் முதலமைச்சரின் மகன் அமைச்சர் உதயநிதியும், மருமகன் சபரீசனும் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டு, அதை எப்படி வெள்ளைப் பணமாக மாற்றுவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் கூறியதாக சொல்லப்பட்ட தகவல் ஆளும் திமுக அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் பேரதிர்ச்சி தரும் ஒன்றாகவே அமைந்து இருந்தது.

பிடிஆர் இலாக்கா மாற்றம்

முதலில் இந்த ஆடியோ வெட்டியும், ஒட்டியும் சேர்க்கப்பட்டுள்ளது என்று பி டி ஆர் மறுத்தார். இது தொடர்பான இரண்டாவது ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியானபோது, இந்த ஆடியோக்கள் போலியானவை ஜோடிக்கப்பட்டவை என்று அடியோடு நிராகரித்தார். ஆனாலும் நெருப்பின்றி புகையாது என்பது போல அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

இந்த நிலையில்தான் கடந்த மாதம் அமைச்சரவை மாற்றி அமைக்கப் பட்டபோது பிடிஆரின் நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு தகவல் தொழில்நுட்ப துறை ஒதுக்கப்பட்டது. நிதித்துறையை மிகச் சிறப்பாக கையாண்ட போதிலும் தனக்கு இஷ்டமான இலாகா பறிக்கப்பட்டதை பி டி ஆரின் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இதனால் சமீப காலமாகவே அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்காவுக்கு திரும்பும் பிடிஆர்?

ஐடி துறை அமைச்சர் பிடிஆருக்கு பிடித்தமான துறை தான் என்றாலும், அதில் அவ்வளவாக விருப்பம் காட்டாமலும் தனது துறையில் என்ன நடக்கிறது? எந்த மாதிரி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது? எந்தெந்த திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன குறித்தெல்லாம் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறார் என்கிறார்கள்

அது மட்டுமின்றி அவருக்கு கோட்டையில் புதிய துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என்றும் கூறுகிறார்கள். இதனால் அவர் விரைவில் அதிரடி முடிவு ஒன்றை எடுக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. குடும்பத்துடன் பி டி ஆர் மீண்டும் அமெரிக்காவிற்கே திரும்ப போகிறார். இனி அவர் தமிழகத்திற்கு வருவது அபூர்வமாகத்தான் இருக்கும் என்கிறார்கள்.

ஏற்கனவே மதுரை நகரில் தன்னை அமைச்சர் மூர்த்தியும், மூத்த திமுக நிர்வாகிகளும் புறக்கணித்து வரும் நிலையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு அவருடைய நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அவரை சக அமைச்சர்கள் யாரும் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்ற நிலையும் உருவாகிவிட்டது.

இதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் தனது நிதி அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை அவர் தற்போது மறைமுகமாக பொதுவெளியில் பேசத் தொடங்கியும் இருக்கிறார்.

வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையில் தற்காலிகம்

மிக அண்மையில் மதுரைக் காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மாணவர்களிடையே பேசுகையில், “வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையில் தற்காலிகமானது. உலகத்தில் யாருமே என்றைக்கும் எல்லாவற்றிலும் வெற்றி பெற்றவர்கள் கிடையாது. தோல்வியே காணாதவர்களும் கிடையாது. வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு விடா முயற்சி, தன்னம்பிக்கை, துணிச்சல்தான் தேவை” என்று கூறியிருந்தார்.

இதை அவரது மன ஓட்டத்துடன் தொடர்புபடுத்தி பார்க்கும் அவருக்கு நெருக்கமான சிலர்,”பிடிஆர் அமெரிக்கா செல்ல முடிவெடுத்திருப்பது உண்மைதான். ஆனால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல நினைக்கவில்லை. அப்படி செய்தால் இவ்வளவு நாள் மக்களுக்காக, தான் பேசிய அரசியலுக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்று கருதுவதாக” கூறுகின்றனர்.

அதேநேரம் மாணவர்களிடம் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக அவர் பேசும்போது தோல்வியை குறிப்பிட்டு கூறுவது ஏற்க கூடிய ஒன்றுதான். என்றாலும் கூட வெற்றிக்கு இணையாக தோல்வியையும் சம நிலையில் வைத்து மாணவர்களிடம் பேசுவது அண்மைக் காலமாக தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மனதில் வைத்து பி டி ஆர் சொல்வது போலவே உள்ளது” என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் விளக்கம் தருகிறார்கள்.

ராஜினாமா செய்ய வாய்ப்பே இல்லை

இன்னும் சிலரோ பி டி ஆர் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்து விடமாட்டார். அவர் பேசுகிற தொனியை வைத்து திட்டவட்டமாக எதையும் கூற இயலாது. எனினும்
அமைச்சர் பதவியிலிருந்து விலகாமல் அவர் ஓரிரு மாதங்கள் அமெரிக்கா சென்று அங்கிருந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் மூலம் மத்திய வெளியுறவுத்துறையிடம் அவர் அனுமதி கேட்க முடியும். ஆனாலும் அமைச்சர் பதவியை அவர் நிச்சயம் ராஜினாமா செய்ய மாட்டார்” என்று அடித்து சொல்கிறார்கள்.

“எது எப்படியோ, அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் அமெரிக்கா செல்வதில் குறியாக இருக்கிறார் என்பதை மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு பல முக்கிய காரணங்கள் உண்டு” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஐ பெரியசாமியுடன் மோதல்

ஏனென்றால் அவருக்கு முதலில் நிதி அமைச்சர் பதவி கொடுத்ததை திமுகவின் மூத்த அமைச்சர்களில் சிலர் விரும்பவில்லை. ஏனென்றால் தங்களது துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தால் இப்போது உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதே அதிகம் தான் என்று பி டி ஆர் மறுத்துவிடுவதும் உண்டு.

அதேபோல வெளிப்படையாக பேசுவதிலும் தயக்கம் காட்டமாட்டார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கூட்டுறவு சங்க வார விழாவில் பேசும்போது தமிழகத்திலிருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. கூட்டுறவுத்துறையின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் எனக்கு திருப்தி இல்லை என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.

இதற்கு அப்போது கூட்டுறவுத் துறையை தன் வசம் வைத்திருந்த அமைச்சர் ஐ பெரியசாமி, “கூட்டுறவுத் துறையில் திட்டங்கள் மூலம் மக்கள் பயன்பெற வேண்டும். மக்களை திருப்தி படுத்தவேண்டும் என்பதே எங்களது நோக்கம் அதற்காக மட்டுமே பயணிக்கிறோம், மக்களை திருப்திப்படுத்தினால் போதும் ஒருவேளை ரேஷன் கடையையே தெரியாதவர்கள் திருப்தி அடையவில்லை எனக் கூறுவதில் எங்களுக்கு கவலை இல்லை” என்று பதிலடி கொடுத்தார். கடைசியில் முதலமைச்சர் ஸ்டாலின் இருவரையும் சமாதானப்படுத்த நேர்ந்தது.

பரிதாப நிலையில் பிடிஆர்

கடந்த 2 ஆண்டு கால திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வருவாய் சீர்திருத்தங்கள் காரணமாக கடந்த ஆட்சியில் 62 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறையை 30 ஆயிரம் கோடி ரூபாயாக குறைத்ததாக அவர் தெரிவித்த தகவல் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகவும் பிடித்துப்போனது.

அதனால் அவர் மீது மூத்த அமைச்சர்கள் வைத்த குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் பேசியதாக சமூக ஊடகங்களில் வெளியான ஆடியோவுக்கு பின்பு பி டி ஆரின் நிலைமை பரிதாபம் என்று கூறும் அளவிற்கு மாறி போனது.

இதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தற்போது அமைச்சர் பதவியில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் இருந்தாலும் கூட கட்சி நிகழ்ச்சிகளில் அவர் முழுமையாக புறக்கணிக்கப்படுகிறார். இது போன்ற நிலைமை நீடிப்பதை அவர் விரும்பவில்லை. அதனால்தான் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்புவதற்கு அவர் திட்டமிட்டு இருக்கலாம். அங்கு சென்றால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் ஆடியோ வெளியானபோது, எழுதிக் கொடுத்த ராஜினாமா கடிதத்தை பி டி ஆர் இதுவரை திரும்பப் பெறவில்லை என்று காரணம் கூறப்படுகிறது.

என்ன செய்ய போகிறார் பிடிஆர்?

இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள அவருக்கு நெருக்கமான நண்பர்கள் அவரை மீண்டும் இங்கே வாருங்கள் நல்ல பொறுப்புகளில் இருக்கலாம். அமைச்சரவை பொறுப்பிலிருந்து விலகி விடுங்கள். அமெரிக்காவிலேயே நிரந்தரமாக குடியேறி விடலாம். அமெரிக்க நிறுவனங்கள்தான் உங்களை மீண்டும் அழைகின்றனவே ஏன் தயங்குகிறீர்கள் என்று அவரை அசைத்து வருகின்றனர்.

அவர்களுக்கு சாதகமாகவே பி டி ஆர் முடிவெடுக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அவருடைய அரசியல் வாழ்க்கை இனியும் தொடருமா என்பது சந்தேகம்தான்” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

பி டி ஆர் என்ன செய்யப் போகிறார் என்பதற்கு விரைவில் விடை கிடைக்கலாம்!

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 603

    0

    0