இது தமிழக அரசுக்கு கிடைத்த வெற்றி… ஆளுநருடன் சண்டை போட நாங்க தயாராக இல்லை ; அமைச்சர் ரகுபதி…!!

Author: Babu Lakshmanan
10 January 2024, 11:54 am

தமிழ்நாடு அரசுதான் துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்கின்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பு வழங்க கடந்த மூன்று தினங்களாக டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வரக்கூடிய நிலையில், புதுக்கோட்டை நகர பகுதிக்கு உட்பட்ட காமராஜபுரம் 10ம் வீதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் தொகுப்பை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். மேலும் இதில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா, நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை மக்கள் பெற்றுச் சென்றனர்.

அப்போது, இந்த விழாவில் அமைச்சர் ரகுபதி பேசுகையில்: திராவிட மாடல் ஆட்சியில் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையின் அடிப்படையில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அனைத்து மதத்தினருக்கும் ஆயிரம் ரூபாய் உடன் கூடிய பொங்கல் தொகுப்பை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து வழங்கியுள்ளார். திராவிட மாடல் கொள்கையை ஏற்காதவர்கள் ஆட்சிக்கு எதிரானவர்கள்.

திராவிட மாடல் ஆட்சி என்பது ஏழை பணக்காரர்கள் வித்தியாசம் பார்க்காமல் ஏழையாக இருப்பவர்களையும் பணக்காரர்களாக மாற்றுவதற்கான வழிகளை அரசு செய்து வருகிறது. மேடு பள்ளங்களை பார்க்காமல் பள்ளத்தில் உள்ளவர்களை மேட்டில் கொண்டு செல்லக்கூடிய ஆட்சி நடைபெற்று வருகிறது என்று பேசினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரகுபதி கூறுகையில், “தமிழ்நாடு அரசுதான் துணைவேந்தர் தேர்ந்தெடுக்கும் குழுவை நியமிக்க வேண்டும் என்கின்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து ஆளுநர் அறிவித்துள்ளார். இது தமிழ்நாடு அரசு எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டிற்கு கிடைத்திருக்கக் கூடிய வெற்றி என்று சொல்லி ஆளுநருடன் சண்டையிட தயாராக இல்லை, தமிழ்நாடு அரசு எடுத்திருக்கின்ற நிலைப்பாட்டிற்கு ஆளுநர் அறிவித்துள்ளதற்கு வரவேற்புக் கூறியது.

அரசு தலைமை வழக்கறிஞர் ராஜினாமா சொந்த காரணம் என்று கூறியுள்ளார். அவர் எதற்காக ராஜினாமா செய்தார் என்று சென்னை சென்று பார்த்தால் தான் தெரியும். அதனால் அது குறித்து மற்ற விவரங்கள் தெரியாது, என்று தெரிவித்தார்.

  • Ravi Mohan debut Direction இயக்குநராகும் SK பட வில்லன்.. ஹீரோ இவரா? அதிர்ச்சியில் கோலிவுட்!