ஆன்லைன் ரம்மி தொடர்பாக விரைவில் அவசர சட்டம் ; நீட் மசோதாவிற்கு நல்ல முடிவு வரும்.. அமைச்சர் ரகுபதி நம்பிக்கை!!
Author: Babu Lakshmanan14 September 2022, 12:54 pm
ஆன்லைன் ரம்மி தொடர்பான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
5 ஆண்டுசட்டப் படிப்புகளுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், மாணவர் சேர்க்கைக்கான ஆணையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் அறையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 12 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கான சேர்க்கை ஆணையை அமைச்சர் வழங்கினார்.
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் மொத்தம் 1731 இடங்கள் உள்ள நிலையில், முதல் சுற்று கலந்தாய்வின் முடிவில் சுமார் 1300 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் இருக்கும் இடங்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி கூறியதாவது :- ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என்றும், அச்சட்டம் எந்த நீதிமன்றத்திலும் ரத்து செய்யப்படாத வகையில், வலுவானதாக கொண்டுவர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், நீட் தேர்வு சட்ட மசோதா குறித்து ஆளுநர் கேட்கப்பட்ட விளக்கங்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் சட்டத்துறையால் வழங்கப்பட்டுள்தாக கூறிய அவர், நீட் மசோதாவிற்கு நல்ல முடிவு வரும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் மாளிகையிலிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கப் பெறவில்லை, எனவும் அவர் கூறினார்.