பெண் நிருபர் கேட்ட கேள்வியால் கடுப்பான அமைச்சர் ராஜகண்ணப்பன்… டக்கென்று கேமிராவை தட்டிவிட்டதால் அதிர்ச்சி..!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
30 March 2022, 7:46 pm

சென்னை : துறை மாற்றம் செய்யப்பட்ட அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் பெண் நிருபர் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த அவர், திடீரென கேமிராவை தட்டிவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டுகூட எட்டாத நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது அடுக்கடுக்கான புகார்கள் குவிந்து கொண்டே வந்தன. அண்மையில், சேலத்தில் நடந்த லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில், அதன் நிர்வாகிகள் தமிழக அரசு மீது வெளிப்படையான குற்றச்சாட்டுக்களையும், புகார்களையும் முன்வைத்தனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுவதாகவும், ஒரு குண்டூசியை நகர்த்தி வைப்பதற்குக் கூட பல ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கும் நிலைமைக்கு மோட்டார் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளதாக, அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழ்நாடு தலைவரும், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவருமான முருகன் வெங்கடாஜலம் குற்றம்சாட்டினார்.

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் ஆகப்போவதாகவும், வரலாறு காணாத அளவிற்கு போக்குவரத்து துறையில் மட்டும் லஞ்சம் ஊழல் தலைவிரித்தாடுவதாகக் கூறிய அவர், தேர்தல் சமயத்தில் எவர் தவறு செய்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதையும் சுட்டிக் காட்டி பேசினார்.

இந்த சூழலில், போக்குவரத்துத்துறை ஊழியர்களிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி பாகுபாடு காட்டுவதாக, பிடிஓ ஒருவர் வேதனை தெரிவித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், பட்டியலினத்தைச் சேர்ந்த தங்களை சாதியைச் சொல்லி சொல்லியே பேசுவதாகவும், நாய் போல தங்களை நடத்துவதாகவும் கூறியிருந்தார்.

முன்னதாக, சென்னையில் போக்குவரத்து துணை ஆணையர் நடராஜன் என்பவரிடம் பல லட்ச ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கூட ஆகாத நிலையில், தமிழக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி உண்டாக்கும் விதமாக அமைச்சர் ராஜகண்ணப்பனும், அவர் கண்காணித்து வந்த துறையும் செயல்பட்டதால் முதலமைச்சர் ஸ்டாலின் ஆத்திரமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரிடம் இருந்த போக்குவரத்துத்துறையை பறித்து விட்டு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை கொடுத்துள்ளார்.

பல்வேறு தவறுகளில் ஈடுபட்டவருக்கு துறை மாற்றம்தான் தண்டனையா..? என்று எதிர்கட்சிகளும் தமிழக அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியுள்ளது.

Courtesy – TOI

இந்த நிலையில், சென்னையில் பிரபல தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த பெண் நிருபர் ஒருவர், அமைச்சர் ராஜகண்ணப்பனிடம், போக்குவரத்து துணை ஆணையர் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளிக்காத அவரோ, கோபத்தில் நிருபரின் கேமிராவை தட்டிவிட்டு விட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அமைச்சரின் இந்த செயலுக்கு கண்டனம் வலுத்து வருகிறது.

இதன் ஒருபகுதியாக, பாஜக செய்தித் தொடர்ப்ளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள கண்டனப் பதிவில், “பெண் நிருபரிடம் கடுமையாக நடந்து கொண்டு ஊடக சுதந்திரத்தை பறிக்க முயன்ற அமைச்சர் ராஜகண்ணப்பனை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழக ஊடகங்கள் திமுகவை கண்டிக்குமா? ஊடக சுதந்திரமா? திமுக ஆட்சியின் மீதான பயம் அல்லது பாசமா..,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1431

    0

    0