பாஜகவை பார்த்து அமைச்சர் துரைமுருகனுக்கு பயம் வந்திருச்சு : ஏன் தெரியுமா..? முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு சொன்ன பதில்…!!

Author: Babu Lakshmanan
18 November 2022, 3:47 pm

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் எனவும், அதிமுக எனும் எக்ஸ்பிரஸில் ஏறுகிறவர்கள் டெல்லி சென்று சேரலாம் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பாலம் மற்றும் பயணியர் நிழற்குடை ஆகியவற்றை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக அரசின் மீது மக்களுக்கு திருப்தி இல்லை. அதை வெளிப்படுத்தும் விதமாகவே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவு துறையின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என பேசி வருகிறார்”, என்றார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த கேள்விக்கு, “அதிமுக எனும் எக்ஸ்பிரஸ் டெல்லிக்கு புறப்பட்டு விட்டது. அதில் ஏறுகிறவர்கள் டெல்லிக்கு செல்லலாம். கூட்டணிக்கு எப்போதும் அதிமுக தான் தலைமை ஏற்கும். அதிமுக கூட்டணியை நம்பி வருகிறவர்களை நிச்சயம் கைதூக்கி விடுவோம்,” என கூறினார்.

பாஜக வளர்ந்து விட்டதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு, “அமைச்சர் துரைமுருகன் பயந்து விட்டார் என நினைக்கிறேன். அவரிடம் ஏற்கனவே ரெய்டு நடந்துள்ளது. துறை ரீதியான சில புகார்களும் உள்ளன. எனவே, அவர் அப்படி சொல்லி இருக்கலாம். அதிமுகவை பொறுத்தவரை தமிழ்நாடு திராவிட பூமி. இங்கு திராவிட இயக்கம் மட்டும் தான் ஆட்சி அமைக்க முடியும்”, என தெரிவித்தார்.

திமுகவை எதிர்க்க ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் சேர வேண்டும் என்ற டிடிவி தினகரனின் கருத்து குறித்த கேள்விக்கு, “ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லோரும் இப்போது ஒன்றாக தான் உள்ளோம். அதிமுகவில் பிளவு ஏற்படுவதும் பின்பு மீண்டும் பிரிந்தவர்கள் இணைவதும் வழக்கம் தான். எனவே, பிரிந்து சென்றவர்கள் உரிய நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க வேண்டும். அப்போது தான் விடிவுகாலம் கிடைக்கும். எதிர்காலத்தில் எதுவும் எப்படியும் மாறலாம்,” என குறிப்பிட்டார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!
  • Close menu