மின்வெட்டு தாங்க முடியல… உங்க வீட்டில் வந்து தங்கலாமா…? டுவிட்டரில் சண்டை போட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி – சீமான்…!!
Author: Babu Lakshmanan9 May 2022, 8:40 am
சென்னை : மின்வெட்டு மற்றும் திமுகவின் ஓராண்டு ஆட்சி நிறைவு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியும், சீமானும் டுவிட்டரில் சண்டையிட்ட சம்பவம் இரு கட்சியினரிடையே வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு காணப்பட்டு வந்தது. நிலக்கரி தட்டுப்பாடுதான் காரணம் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான மாற்று நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டும் வந்து விடும் என்றும், இது நிர்வாக திறமையின்மையை காட்டுவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இதனிடையே, நேற்று முன்தினம் திமுக ஓராண்டு ஆட்சி நிறைவை அக்கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர். 10 ஆண்டுகளில் செய்ய வேண்டியதை 1 ஆண்டில் செய்துவிட்டதாக திமுகவினர் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் பெருமிதம் கூறி வந்தனர்.
அதோடு, ஒரு ஆண்டு சாதனையை விளக்கும் வகையில் காணொளி விளம்பரமும் வெளியிடப்பட்டு, தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
இந்த நிலையில், மின்வெட்டையும், திமுக ஓராண்டு சாதனை காணொளி விளம்பரத்தையும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டார்.
அதாவது, “ஏப்பா சீமான்.. இந்த ஆட்சியின் ஒரு ஆண்டு சாதனையை டிவில போடுறாங்கலாம்.. அது என்னனு பார்க்கலாம்னு பாத்தா எழவு கரண்ட் இல்லப்பா.. அது தான் பெரியம்மா திராவிட மாடல்..!,” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனைக் கண்ட மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுப்பாகி போனார். உடனே அவரது டுவிட்டை டேக் செய்து அவர் அளித்த பதிலில், “கடும் கோடையிலும் உச்சபட்ச மின் தேவை இருந்த போதும் தமிழ்நாடு மின் வாரியம் மிகச் சிறப்பாகக் கையாண்டு வருகிறது. அண்ணன் சமீபத்தில் குடியேறி இருக்கும் கடற்கரையோர சொகுசு பங்களாவின் மின் இணைப்பு எண்ணைக் கொடுத்தால் அங்கு ‘உண்மையிலேயே’ மின் வெட்டு இருந்ததா என்பதை விசாரித்துச் சொல்கிறேன்,” எனத் தெரிவித்திருந்தார்.
அமைச்சரின் இந்த பதிவுக்கு சீமானும் உடனே பதிலளித்தார். அதாவது, மின்சாரத்துறை அமைச்சர் அன்புத்தம்பி செந்தில் பாலாஜி அவர்களுக்கு!, அண்ணனின் கடற்கரையோர வாடகை சொகுசு பங்களாவில் நீங்கள் வந்து குடியிருங்கள். நீங்கள் ரொம்பநாளா குடியிருக்கிற ‘குடிசையில’ அண்ணன் தங்கிக்கொள்ள தயவுசெய்து அனுமதி கொடுங்கள்!, என்று நக்கலாக பதிலளித்தார்.
இதற்கு உடனடியாக ரிப்ளை செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “குடிசையோ- மாளிகையோ அரசாங்க இல்லத்தில் தங்குவதற்கு, மக்கள் வாக்களித்து சட்டமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமே! விரும்பினால், கரூர் வீட்டில் விருந்தினராக தங்க எங்கள் அன்பு உண்டு. அதுசரி, சொகுசு பங்களாவில் மின்தடை ஏற்பட்டதாகச் சொன்னீர்கள். வீட்டின் மின் இணைப்பு எண்ணைக் கேட்டிருந்தேன்!,” என இவரும் மீண்டும் கேள்வி எழுப்பினார்.
இரவு நேரத்தில் அமைச்சரும், சீமானும் மின்வெட்டு தொடர்பாக டுவிட்டரில் மாறி மாறி சண்டையிட்ட சம்பவத்தால், இருகட்சியினரும் கமெண்ட்ஸில் மோதிக் கொண்டனர்.