அமலாக்கத்துறை கிட்ட ஆதாரம் இருக்கு… பரிதாப அரசியல் நாடகம் வேணாம் ; செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் பாஜக அட்வைஸ்!!

Author: Babu Lakshmanan
26 June 2023, 2:34 pm

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் பரிதாப அரசியல் வேண்டாம் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதையடுத்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்த அனுமதியை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறையின் அனைத்து கோரிக்கைகளையும் நிராகரித்தது.

இந்த நிலையில் அமலாக்கத் துறையினரின் சட்ட விரோதக் காவலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது :- செந்தில் பாலாஜியை ஜூன் 14ம் தேதி அதிகாலை 1:39 மணிக்கு கைது செய்யும் முன்பு அவரை சட்ட விரோதக் காவலில் வைக்கவில்லை. அவரை சட்ட விரோதமாக சிறை பிடித்ததாக கூறுவது தவறு. சம்மனை அமைச்சர் செந்தில் பாலாஜி பெற மறுத்தார். அதிகாரிகளை மிரட்டும் தொனியில் அமைச்சர் செந்தில் பாலாஜி நடந்து கொண்டார்.

விசாரணைக்கு ஒத்துழைக்காததால் வேறு வழியின்றி கடைசி நடவடிக்கையாக கைது செய்யப்பட்டார். சாட்சிகளை கலைத்து, ஆதாரங்களை அழிக்க வாய்ப்பு இருந்ததால் தான் அவர் கைது செய்யப்பட்டார். நள்ளிரவிலேயே அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் அண்ணி நிர்மலா ஆகியோருக்கு போன் செய்தோம். கைது செய்யப்பட்டதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க முயற்சித்தோம். ஆனால் அவர்கள் அழைப்புகளுக்கு பதிலளிக்காததால் அவர்களிடம் தெரிவிக்க முடியவில்லை. இதையடுத்து குறுஞ்செய்தி, மின்னஞ்சல் மூலமாக அவர்களுக்கு தெரிவித்தோம். கைதின் போது காரணங்கள் தெரிவிக்கப்பட்டது.

இதுவரை திரட்டப்பட்ட ஆதாரங்களில் இருந்து, செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றம் புரிந்துள்ளார் என நம்ப போதுமான காரணங்கள் உள்ளன. பெரும் தொகையை டெபாசிட் செய்யப்பட்டதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் இதுவரை அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்கவில்லை. எதிர்காலத்தில் காவலில் வைத்து விசாரிக்க வாய்ப்பளிக்க வேண்டும், என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் பரிதாப அரசியல் வேண்டாம் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :- உயர் நீதி மன்றத்தில் அமலாக்கதுறை அளித்துள்ள வாக்குமூலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததுடன், தான் ‘அமைச்சர்’ என்ற அதிகாரத்தில் அதிகாரிகளை மிரட்டியதையும், கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுத்ததையும், கையெழுத்திட மறுத்ததையும் குறிப்பிட்டு, அவர்களின் குடும்பத்தினர் அலை பேசியில் தொடர்பில் வர மறுத்ததையும். பின்னர் அவர்களுக்கு செந்தில் பாலாஜியின் கைது குறித்த தகவல் அனுப்பி வைத்ததையும், சாட்சிகளோடு தெளிவாக பதிவு செய்துள்ளது.

இனியும், அப்பாவி மக்களிடம் பண மோசடி செய்த இந்த விவகாரத்தில் பரிதாப அரசியல் நாடகத்தை நடத்தாமல், நீதிக்கு முன் தலை வணங்க வேண்டியது அனைவரின் கடமையாகும்,” என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 443

    0

    0