மேகலாவின் கோரிக்கைக்கு க்ரீன் சிக்னல்.. செந்தில் பாலாஜி தரப்பினருக்கு கிடைத்த நம்பிக்கை ; சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு..!!
Author: Babu Lakshmanan7 July 2023, 3:55 pm
செந்தில் பாலாஜி வழக்கை வரும் 11-ந்தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பின்னர் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
அதேவேளையில், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டிருந்தார். இதனால் இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த நிலையில், வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராவதற்கு ஏதுவாக வழக்கை, செவ்வாய்கிழமை விசாரிக்க வேண்டும் என்ற செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி சி.வி. கார்த்திகேயன், ஜுலை 11 மற்றும் 12ம் தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கு விசாரணை நடத்தப்படும் என்றும், முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தை காவல் காலமாக கருத முடியுமா..? என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.