7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை உறுதி… செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை வாதம்.. பரபரப்பில் சென்னை உயர்நீதிமன்றம்..!

Author: Babu Lakshmanan
12 ஜூலை 2023, 12:47 மணி
Quick Share

குற்றத்தை கண்டுபிடிக்க, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதத்தை முன்வைத்துள்ளார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை கைதை தொடர்ந்து அவருக்கு நீதிமன்ற காவலும் விதிக்கப்பட்டது. இந்த சமயத்தில், செந்தில் பாலாஜி சட்டவிரோத காவலில் இருப்பதாக அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. பின்னர் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சமயத்தில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மனுவை நீதிபதி பரத சக்கரவர்த்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.

அதேவேளையில், செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என்று கூறி அவரை விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டிருந்தார். இதனால் இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. 3வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன், இந்த வழக்கை விசாரித்தார்.

நேற்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில், “அதிகாரிகளுக்கு காவல் துறையினருக்கு அதிகாரம் வழங்கவில்லை. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கை பொறுத்தவரை, அமலாக்கத்துறை புலனாய்வை மேற்கொள்கிறது. புலன் விசாரணை அதிகாரம் வருவாய் புலனாய்வு இயக்குநகரத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் செய்ததற்கான அனைத்து ஆவணங்களும் இருந்தால் மட்டுமே அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்திருப்பதாகவோ, அதை மறைத்திருப்பதாகவோ எந்த ஆதாரங்களும் இல்லை,” என்று வாதாடினார்.

நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை செந்தில் பாலாஜி தரப்பினருக்கு எழுப்பினர். இந்த நிலையில், 2வது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். அவர் கூறியதாவது :- சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிடிலும் புலன் விசாரணை செய்வது கடமை. குற்றத்தை கண்டுபிடிக்க, சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது. காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுப்பது அமலாக்கத்துறையின் கடமையை மறுப்பதாகும்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டக் குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. எந்த அழுத்தத்திற்கும் அமலாக்கத்துறை உட்படுவதில்லை. தவறாக கைது நடவடிக்கை எடுத்தால் அமலாக்கத்துறை அதிகாரிகளையே கைது செய்ய விதியுள்ளது. அப்பாவிகள் கைது செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்ய இந்த கடுமையான பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.

  • Roja முதலமைச்சர் பதவியில் நீங்க உட்காருங்க.. துணை முதலமைச்சர் நடிகை வைத்த கோரிக்கை!
  • Views: - 497

    0

    0