அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு : ஆவணங்கள் ரொம்ப முக்கியம்… தமிழக அரசுக்கு உத்தரவு போட்ட உச்சநீதிமன்றம்!!
Author: Babu Lakshmanan23 November 2022, 1:33 pm
அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான மோசடி வழக்கு குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை சென்னை மத்திய குற்றப்பிரிவு மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கடந்த 10ம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஆஜரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாலாஜி, இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதாகவும், மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த முறையீட்டை ஏற்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நவம்பர் 23ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவித்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் மேல்முறையீடு மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதுடன், மோசடி விவகாரம் தொடர்புடைய வழக்கு ஆவணங்களை தற்போதுள்ள நிலையிலேயே பத்திரமாக வைக்க வேண்டும் எனக் கூறி, இறுதி விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு தள்ளிவைத்தது.
0
0