இருபக்கமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு.. சைலண்டாக சென்ற அமைச்சர் செந்தில் பாலாஜி.. நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு..!!!

Author: Babu Lakshmanan
12 August 2023, 4:24 pm

அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி, அவரது மனைவி ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அவரது கைது சரியானது தான் என்றும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதியும் வழங்கியது.

இதனை எதிர்த்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், 5 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து தீர்ப்பு வழங்கியது.

இதை தொடர்ந்து, கடந்த 7ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்கக் கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு அனுமதி வழங்கிய நீதிபதி அல்லி, ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி உத்தரவிட்டார்.

இதனையடுத்து, புழல் சிறையிலிருந்து சாஸ்திரி பவனுக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜியிடம் 5 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதனை வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நீதிமன்றகாவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இருபுறமும் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் செந்தில்பாலாஜியை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு அமலாக்கத்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது, 3000 முதல் 4000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை இரும்பு பெட்டிக்குள் வைத்து அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். அதில், செந்தில் பாலாஜியின் பெயரை தவிர்த்து வேறு யாரின் பெயரும் இடம்பெறவில்லை என்று அமலாக்கத்துறை வழக்கறிஞர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கில் செந்தில்பாலாஜியிடம் மேலும் விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், நீதிமன்ற காவலை நீட்டிக்கும்படி நீதிபதி அல்லியிடம் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் 25ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீண்டும் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 475

    0

    0