மீண்டும் சிக்கலில் அமைச்சர் செந்தில் பாலாஜி : உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
18 November 2022, 7:37 pm

தற்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பணியாற்றி வரும் செந்தில் பாலாஜி கடந்த 2011-2015 அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பணியாற்றி வந்தார்.

அப்போது தான் சார்ந்த துறையில் பணி வாங்கி தருவதாக கூறி 81 பேரிடம் பணம் பெற்று ஏமாற்றியதாக இவர் மீதும் இவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் ஆகியோர் மீதும் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் வழக்கு விசாரணை சென்னை எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது பொய்யான குற்றச்சாட்டு என்றும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவ்வாறான குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தன் மீதான விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இவரது விசாரணையை ரத்து செய்யக்கூடாது என்றும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக வழக்குப்பதிந்து விசாரணை செய்ய வெண்டும் என்றும் ‘பாலாஜி’ மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மேலும், இந்த வழக்கிலிருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கூடாது என்றும் தங்களையும் இதில் மனுதாரராக சேர்த்து விசாரிக்க வேண்டும் என்றும் அமலாக்கத்துறை சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்கிற அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவையும், தங்களை இணைத்துக்கொள்ள வேண்டி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
மேலும், ‘பாலாஜி’ என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கில் நிலுவையில் உள்ள புகார்கள் மற்றும் முதல் தகவல் அறிக்கையின் மீது மீண்டும் முதலிலிருந்து விசாரணை தொடங்க வேண்டும் என மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் இந்த உத்தரவை ஏற்காத ‘பாலாஜி’ இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு பின்பற்றப்படவில்லை என்றும் தற்போது இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

எனவே இந்த வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைப்பதாக இருந்தால் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அல்லது ஆவணங்களை கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க தடை விரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த மனு மீதான நீதிபதி கிருஷ்ண முராரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பணமோசடி வழக்கில், வழக்கின் ஆவணங்களை கீழமை நீதிமன்றத்திடம் ஒப்படைக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், வழக்கின் விசாரணை வரும் புதன் கிழமைக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த வழக்கிலிருந்து எப்படியாவது வெளியே வரவேண்டும் என்று முயன்று கொண்டிருக்கையில் உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் இவ்வாறு மாறி மாறி உத்தரவு பிறப்பித்திருப்பது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்புக்கு சற்று பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 438

    0

    0