‘மனநலம் பாதித்தவரா ஆளுநர் ஆர்என் ரவி..? பார்க்கவே பரிதாபமாக இருக்கு’… கடுமையான வார்த்தைகளால் விமர்சித்த திருமாவளவன்..!!
Author: Babu Lakshmanan30 June 2023, 10:40 am
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த ஆளுநர் ஆர்என் ரவியை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதையடுத்து, நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2வது முறையாக நீதிமன்ற காவல் விதித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, செந்தில் பாலாஜி பொறுப்பு வகித்து வந்த மின்சார துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை ஆகிய துறைகளை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், அமைச்சர் முத்துசாமிக்கும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்என் ரவி, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு முன்மொழிந்ததை ஏற்கவில்லை.
ஆனால், ஆளுநரின் நிராகரிப்பையும் மீறி, தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என அரசாணை வெளியிட்டது. இதையடுத்து, தமிழக அரசு துறைகளுக்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், செந்தில் பாலாஜியை அமைச்சர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது புகைப்படமும் அதில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்த இலாகாக்களின் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளன.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்என் ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஆளுநரின் இந்த அறிவிப்பால் கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றும், இதனை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனக் கூறினார்.
அதேபோல, காங்கிரஸ், ஆம்ஆத்மி உள்ளிட்ட கட்சியினரும் ஆளுநரின் செயலை கடுமையாக விமர்சித்தனர். இதனிடையே, செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில், ஆளுநரின் இந்த செயலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் நடவடிக்கைகள் மனநலம் சீராக இல்லாத ஒருவரின் செயற்பாடுகளைப் போலவே உள்ளது. அவருக்கு என்ன ஆனது என்கிற பரிதாபம் மேலிடுகிறது.
அவர் தனது அதிகார வரம்புகளை அறியாமல் செயல்படுகிறாரா? அல்லது உள்நோக்கத்துடன் தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை உருவாக்க நினைக்கிறாரா?, அவரது தான்தோன்றித் தனமான போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது, என தெரிவித்துள்ளார்.
0
0