இலவசம் வேண்டாம் என சொல்பவர்களே… இலவச திட்டங்களை அறிவிக்கிறார்கள் : பாஜகவை சீண்டிய அமைச்சர் செந்தில் பாலாஜி..!!

Author: Babu Lakshmanan
19 August 2022, 8:47 am

கோவை : இலவசம் வேண்டாம் என்று சொல்பவர்களே அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருவதாக கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பாஜகவை சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 15-ந் தேதி கோவை வந்து அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, முதலமைச்சரின் கோவை பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந்தேதி கோவை வருகிறார்.கோவையில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.

முதலமைச்சர் கோவை வருவது தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுது. மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து. அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற 23ஆம் தேதி ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முதலமைச்சரை வரவேற்க உள்ளதாகவும், 24ஆம் தேதி நடைபெறும் அரசு விழாவில் கிணத்துகடவு பகுதியில் ஒரு லட்சத்து 6ஆயிரத்து 641பேருக்கு நலத்திட்டங்களை வழங்கி, புதிய திட்டங்களையும் துவக்கி வைக்க உள்ளதாகவும் கூறினார்.

மேலும், பொள்ளாச்சியில் முதலமைச்சர் தலைமையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைய உள்ளதாக தெரிவித்தார்.

100 யூனிட் மின்சாரம் எளிய மக்களுக்காக வழங்கப்பட்டது. அதேபோன்று தான் மடிக்கணினி, சைக்கிள் முக்கியத்திட்டம் எனவும், இலவசம் அடித்தட்டு மக்களை கைகோர்த்து அழைத்து செல்கிறது எனவும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என கூறிய அவர், அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்துவதே தமிழக அரசின் இலக்கு என தெரிவித்தார்.

இலவசத் திட்டங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறிய அவர், இலவசம் வேண்டாம் என்று சொல்பவர்களே, அவர்கள் ஆளும் மாநிலங்களில் இலவச திட்டங்களை கொடுத்து வருகின்றனர் என மறைமுகமாக பாஜகவை சுட்டிக்காட்டிய அவர், இரட்டை வேசங்களை, தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் முதல்வர் வருகைக்கு நாங்கள் கொடிகள் மற்றும் பேனர்களும் வைப்பதும் இல்லை என தெரிவித்த அவர், முதல்வருக்காக நாங்கள் போஸ்டர் ஒட்டியதுக்கு, அந்த போஸ்டரின் மீது போஸ்டர் ஓட்டுவோம் என சொல்லுவது எப்படி என கேள்வி எழுப்பினார். மேலும், போஸ்டர் ஒட்டும் விவகாரத்தில் அதிகாரிகளை மிரட்டும் தோனியில் ஒரு கூட்டம் செயல்படுவதாகவும், அவர்கள் மீது வழக்கு பதியப்படுள்ளது என கூறினார்.

பாஜகவினர் தங்களின் இருப்பைக் காட்ட செயல்படுகின்றனர் எனவும், இனிமேல் யாராவது கோவை மாவட்டத்தில் சட்டத்தை கையில் எடுத்தால், அரசு வேடிக்கை பார்க்காது என எச்சரிக்கை விடுத்தார். மேலும், அவர்கள் கட்சியினர் கோவை வரும்பொழுது போஸ்டர் ஓட்டுகிறார்கள், அதை தடுக்கிறோமா என தெரிவித்த அவர், வன்முறை சம்பவத்தில் ஈடுப்பட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 561

    0

    0