அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி.. மின்சாரத்துறையில் பலகோடி முறைகேடு செய்ய திட்டம் : எம்.ஆர். விஜயபாஸ்கர் பகீர்

Author: Babu Lakshmanan
16 September 2022, 10:21 am

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என்று முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், புலியூரில் அதிமுக கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியின் சார்பில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உரையாற்றினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- தமிழக மக்களை ஏமாற்றிய மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை கேட்டறிவதாக, ஒரு நாடகத்தினை நடத்தி பெட்டி பெட்டியாக மனுக்கள் வாங்கினார். தற்போது அந்த பெட்டியின் சாவியை மறந்து விட்டார். அவரை தொடர்ந்து ஸ்டாலின் மகனும், நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறி மக்களிடம் வாக்குகளை பெறுவதற்காக நாடகமாடி, பின்னர் தற்போதும் நீட் தேர்வினை ரத்து செய்வோம் என்று மக்களிடம் பொய் கூறி ஏமாற்றி வருகின்றார்.

இங்கு ஒரு அமைச்சர் இருக்கின்றார். ஏற்கனவே விஞ்ஞான ரீதியான முறையில் முறைகேடு செய்து, அதனை தற்போதைய முதல்வர் அன்று பொதுக்கூட்டத்தில் பேசினார். ஆனால் அவருக்கே தற்போது அமைச்சர் பதவியும் கொடுத்து உள்ளார் ஸ்டாலின். அங்கேயும் கிட்சன் கேபினெட் நடத்தி வருகின்றார். மு.க.ஸ்டாலின் மருமகனை பிடித்து தற்போது அமைச்சர் பதவியை பிடித்துள்ளார். இங்குள்ள ஒவ்வொரு திமுக காரனும் எதிர்பார்த்து கொண்டு உள்ளார்கள்.

நமது எதிர்கட்சித்தலைவரும், அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஏற்கனவே சொன்னது போல சொத்துவரியை ஏத்தி விட்டார்கள், மின்சார கட்டணம் விலை உயர்வு அடுத்தது மக்களுக்கு திமுக அரசின் பம்பர் பரிசாக, பஸ் கட்டண உயர்வுடன் அடுத்தடுத்து மக்களுக்கு அதிர்ச்சி காத்து கொண்டிருக்கின்றது.

மேலும், போக்குவரத்து துறையில் ஈவிஎம் மெஷின் உள்ளிட்ட மெஷின்களில் முறைகேடு செய்து பல கோடி சுருட்டிய நம்மூர் விஞ்ஞானி (செந்தில்பாலாஜி) திமுகவிற்கு சம்பாதிப்பதற்காக அடுத்து மின்சாரத்துறையில் ஓவ்வொரு வீட்டிற்கும், மின் கட்டணத்தினை அறியும் மீட்டரில் டிஜிட்டல் முறை என்று கூறி ஸ்மார்ட் மீட்டர் ஒன்றினை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் கோடிகளை சுருட்ட பிளான் செய்துள்ளார்.

ஆனால், ஏற்கனவே போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி செய்துள்ளதை தற்போது உச்சநீதிமன்றமே தூசி தட்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றது. ஆகையால் நம்மூர் விஞ்ஞானி (செந்தில்பாலாஜி) விரைவில் ஜெயிலுக்கு செல்வது உறுதி என்றும், நம் கட்சியினை அழிக்க திமுக கட்சி சதி செய்து வரும் நிலையில், நம் அதிமுக கட்சி எப்போதும் ஒற்றைத்தலைமை தான். அது நமது எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி மட்டுமே.

ஒரு சிலர் போல தர்மயுத்தம் என்று சொல்லி நாடகமாடி, நம் இயக்கத்தின் விரோதிகளான திமுக கட்சியுடன் உறவாட மாட்டார்கள். திமுக கட்சியையும், ஆட்சியையும் புகழ்ந்து சொல்பவர்கள் நம் இயக்கத்திற்கு துரோகம் செய்பவர்கள். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அன்றே சொன்னார். தீய சக்தி கருணாநிதி, திமுக என்றுமே மக்களுக்கு எதிரானவர்கள் ஆவார்கள். அவரது கூற்றுக்கும், நம் புரட்சிதலைவி ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்து விட்டு ரகசிய உடன்பாடு வைத்துள்ளவர்கள், நம் இயக்கத்திற்கு எதிரானவர்கள் ஆவர்கள். நம்முடைய தொண்டர்களும் அவர்களை மறக்க மாட்டார்கள். நம் கட்சி 100 சதவிகிதம் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு தான் ஆதரவு தெரிவுத்து வருகின்றனர், என்றார்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!